Back
Home » திரைவிமர்சனம்
Bakrid Review: தமிழில் இது புதுசு.. ஒட்டகத்துடன் ஒரு பாசப்பயணம்.. மனிதநேயத்தைக் கொண்டாடும் பக்ரீத்!
Oneindia | 22nd Aug, 2019 08:45 AM

சென்னை: ஒரு எளிய மனிதனுக்கும், ஒரு ஒட்டகத்துக்கும் இடையேயான பாசப் பயணம் தான் பக்ரீத்.

நம்முடைய மண்ணில் இன்னும் இன்னும் எத்தனையோ சொல்லப்படாத கதைகள் புதைந்து கிடக்கின்றன. அவை நம்மை சுற்றியே தான் இருக்கின்றன. நாம் தான் அதை கவனித்து தோண்டி எடுக்க வேண்டும். அப்போது தான் அதில் உண்மைத்தன்மை இருக்கும். இதுபோல் ஒரு சில படங்கள் எப்போதாவது வந்து நம் மனதை லேசாக ஈரமாக்கிவிட்டு போகும். அப்படிப்பட்ட ஒரு வாழ்வியல் சார்ந்த படம் தான் பக்ரீத்.

"எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி நடத்தல் வேண்டும்" எனும் வள்ளலாரின் சொற்படி, தம் வீட்டு கால்நடைகளையும் குடும்ப உறுப்பினராக, அண்ணனான, தம்பியாக ரத்த சொந்தமாக கருதி பாராமரிக்கும் நம் மண்ணின் மாந்தர்களில் ஒருவன் தான் இந்த கதையின் நாயகன்.

சென்னைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியாக இருக்கிறார் விக்ராந்த்... இல்ல இல்ல ரத்தினம். அப்படித்தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் விக்ராந்த்துக்கான எந்த அடையாளமும் இந்த படத்தில் இல்லை. படம் முழுவதும் விவசாயி ரத்தினமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரை பற்றி பேச, பாராட்ட இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இப்போது கதைக்கு போகலாம்.

விக்ராந்த்துக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து பிரச்சினை. எனவே இருவரும் பேசிக் கொள்வதில்லை. நீதிமன்ற தீர்ப்புப்படி இருவருக்குமான நிலங்கள் பிரித்து கொடுக்கப்படுகின்றன. தனக்கு கிடைத்த நிலத்தில் விவசாயம் செய்ய நினைக்கிறார் விக்ராந்த். இதற்காக அதே ஊரில் இருக்கும் ஒரு இஸ்லாமியரிடம் தனது நண்பன் மூலம் நிதியுதவி கேட்டுப் போகிறார்.

அங்கு பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக ராஜஸ்தானில் இருந்து ஒரு பெரிய ஒட்டகம் கொண்டு வரப்படுகிறது. கூடவே ஒரு குட்டி ஒட்டகத்தையும் அழைத்து வந்துவிடுகிறார்கள். அந்தக் குட்டியை வெட்ட யாருக்கும் மனசு வரவில்லை. திரும்பவும் அனுப்ப முடியாது, வைத்து பராமரிக்கவும் முடியாது என்ற சூழ்நிலையில், அந்த ஒட்டகத்தை தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார் விக்ராந்த்.

அந்த ஒட்டகத்துக்கு சாரா என பெயர் வைத்து, தங்களுடைய குடும்பத்தில் ஒரு ஆளாகவே அதை வளர்க்கிறார்கள் விக்ராந்த்தும், அவரது குடும்பத்தாரும். விக்ராந்த்தின் மனைவி வசுந்தராவுக்கும், மகளுக்கும் சாராவை ரொம்பவே பிடித்து போகிறது. ஊரே தேடி வந்து ஒட்டகத்தை பார்த்துவிட்டு போகிறது. அதுவும் மற்ற கால்நடைகள் மாதிரியே புல், வேப்பிலை என சாப்பிட்டு பழகுகிறது.

விக்ரமன் படம் போல ஒரு பாடலில் விவசாயம் செழித்து விக்ராந்த்தின் பொருளாதார நிலை உயர, அவருடன் சேர்ந்து சாராவும் வளர்கிறாள். கிட்டத்தட்ட 11 மாதங்கள் ஆன நிலையில் சாராவுக்கு முதல் முறையாக உடல் நிலை பாதிக்கப்படுகிறது. அதற்கு வைத்தியம் பார்க்க வரும் மாட்டு டாக்டர் எம்.எஸ்.பாஸ்கர், ஒட்டகம் ராஜஸ்தானில் இருப்பது தான் அதற்கு உகந்தது. இங்கிருந்தால் வீணாக செத்துப் போய்விடும் என பயமுறுத்துகிறார்.

இதனால் கவலையடையும் விக்ராந்த், சாராவை ராஜஸ்தானில் கொண்டு போய்விட முடிவு செய்கிறார். பிரிய மனமில்லாமல் ஒரு லாரியை பிடித்து அதில் சாராவை ஏற்றி கூடவே செல்கிறார். மகாராஷ்டிராவில் எதிர்பாராதவிதமாக பசு பாதுகாவலர்களிடம் சிக்குகிறார்கள் விக்ராந்த்தும், சாராவும். மிருகவதை தடுப்பு என்ற பெயரில் விக்ராந்த்திடம் இருந்து பிரிக்கப்படுகிறது சாரா. அதன்பின் நடக்கும் உணர்வுப்பூர்வமான, நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவங்கள் தான் 'பக்ரீத்'.

இன்றைய காலகட்டத்தில் விலங்குகளை வைத்து படம் எடுப்பது எத்தனை பெரிய சவால் என்பது நாம் அறிந்த விஷயம் தான். படாதபாடுபட்டு ஒரு நல்ல சினிமாவை கொடுத்திருக்கும் இயக்குனர் ஜெகதீசன் சுபுவுக்கு முதல் பாராட்டுகள். ஒரு எளிய மனிதனின் பாசத்தை, கால்நடைகள் மீது அவன் காட்டும் பரிவை, மிகுந்த அக்கறையோடு பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

மனிதநேயம் தான் படத்தின் மையக்கரு. அதை ஒரு பிரச்சாரமாக அல்லாமல், எமோஷன் நிறைந்த கதையோட்டத்துடன் சொல்லியிருப்பதால் இரண்டரை மணி நேரமும் போரடிக்காமல் நகர்கிறது. படம் முடிந்து வெளியே வரும் போது, கால்நடைகள் மீதும், சக மனிதர்கள் மீதும் தனி பாசம் ஏற்படுகிறது. அதுவும் யூடியூப், வாட்ஸ்அப்பில் நாம் பார்த்த வைரல் வீடியோக்களை தொகுத்து எண்ட் டைட்டிலாக ஓடவிட்டிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம். அதேபோல் ஒளிப்பதிவும் அவரே என்பதால், விதவிதமான லேண்ட்ஸ்கேப்களை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார்.

முன்னமே சொன்ன மாதிரி, ஒரு எளிய மனிதனின் வாழ்வை எந்த யதார்த்த மீறலும் இல்லாமல் கண்முன் நிறுத்துகிறார் விக்ராந்த். ஜிம் பாடி, சிக்ஸ் பேக் காட்டி சண்டை எல்லாம் போடாமல், அடி வாங்கி, உதை வாங்கி காடு மேடுகளில் ஒட்டகத்தை மேய்த்து, அலைந்து திரிந்து ரத்தினமாக வாழ்ந்திருக்கிறார். பல வருடமாக நீங்க எதிர்பார்த்து காத்திருக்கும் வெற்றியை இந்த படத்துக்காக நீங்க போட்டிருக்கும் உழைப்பு நிச்சயம் வாங்கித்தரும் விக்ராந்த்.

'இந்த ரோலுக்கு என்னை விட்டா வேறு யாரு' என அசால்டாகா அப்ளாஸ் வாங்குகிறார் வசுந்தரா. கிராமத்து வேடம் ஒன்றும் அவருக்கு புதிதில்லை என்றாலும், நைசாக பேசி மகளுக்கு தெரியாமல் லேஸ் பாக்கெட்டை தூக்கி பரணில் போடுவது, ஒட்டகத்தை காணாமல் தவிக்கும் குழந்தையை சமாளிக்க விக்ராந்த்துடன் போனில் பேசுவது என சின்னச் சின்னக் காட்சிகளில் கூட அழகாக ஸ்கோர் செய்கிறார். மீண்டும் ஒரு ரவுண்ட் வாங்க வசுந்தரா.

விக்ராந்த் - வசுந்தராவின் மகளாக மழலை மாறாமல் பேசும் குட்டி பொண்ணு ஷ்ருத்திகா செம க்யூட். தீரன் படத்தில் 'மே பேகுனா சாப்' அலறவிட்ட ரோகித் பதக், இதில் லாரி டிரைவராக வந்து மனதை கொள்ளை கொள்கிறார். க்ளீனருடன் சேர்ந்து நம்மை கொஞ்சம் சிரிக்க வைக்கும் பகத், விடைபெறும் போது மனதை நெகிழச் செய்கிறார். விக்ராந்தின் நண்பராக வரும் மோக்லி, வழிப்போக்கனாக வரும் அமெரிக்கக்காரர் என அனைவருமே கனகச்சிதம்.

'கரடுமுரடு பூவே' பாட்டில் மனதை கரைக்கிறார் இமான். அதே அவர் தான் 'லக்கி லாரி'யில் குதூகலப்படுத்துகிறார். வழக்கம் போல் பின்னணி இசையில் நெஞ்சை பிழிகிறார். ஆனால் தேவைக்கு அதிகமான உருக வைத்திருக்கிறார். படம் நகர்வதே தெரியாத அளவுக்கு சுவாரஸ்யமாக எடிட் செய்திருக்கிறார் ரூபன்.

முதல் பாதி படத்தை ஜாலியாக நகர்த்திய இயக்குனர் இரண்டாம் பாதியில் பசு பாதுகாவலர்களை அழைத்து வந்து பதற வைக்கிறார். ஆனால் அந்த பதற்றம் சிறிது நேரம் மட்டுமே நீடிப்பது படத்தின் மைனஸ். அதேபோல் சாரா மீது விக்ராந்த் ஏன் இவ்வளவு பாசம் காட்டுகிறார் என்பதற்கு வலுவான காட்சிகளை முன்பாதியில் வைத்திருக்கலாம். லாஜிக் மீறலை தவிர்ப்பதற்காக, ராணுவ வீரர்களை காப்பாற்றிய ஒட்டகம் என்பதெல்லாம் தேவையில்லாத திணிப்பு. அதேபோல் ஸ்டீவன் ஸ்பீல்பர் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த "வார் ஹார்ஸ்" பாதிப்பு படத்தில் நிறைய தெரிகிறது.

விலங்குகள் படம் என்றாலே குட்டீஸ்களுக்கு செம ஹேப்பியாக்கி விடும். அதிலும் இதில் ஒட்டகத்தை வேறு காட்டுவதால் நிச்சயம் நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். உண்மையில் குழந்தைகளுடன், குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படம் தான் பக்ரீத் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

மனித நேயத்தை கொண்டாடும் இந்த 'பக்ரீத்' எளிய மனிதர்களின் திருவிழா.

   
 
ஆரோக்கியம்