Back
Home » திரைவிமர்சனம்
Kennedy Club Review: கபடி கபடி.. பாட்டு பாடி ரைடு போகும் கிராமத்து பொண்ணுங்க.. தூள் ‘கென்னடி கிளப்’
Oneindia | 22nd Aug, 2019 06:34 PM

சென்னை: பெண்கள் கபடியில் தேசிய அளவில் நடக்கும் ஊழலும், அந்த தடைகற்களை தாண்டி வெற்றி பெறும் தமிழக வீராங்கனைகளுமே கென்னடி கிளப் படத்தின் மையக்கரு.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கென்னடி க்ளப் எனும் பெண்கள் அணியை நடத்தி வருகிறார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான பாரதிராஜா. தனது ஓய்வூதியத்தைக் கூட கபடிக்காக செலவழிக்கும் அளவுக்கு ஈடுபாடு கொண்ட கோச் அவர். கபடி விளையாட்டில் திறமையான ஏழை மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் பயிற்சி அளித்து வருகிறார். அந்த மாணவிகளை எப்படியாவது நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது பாரதிராஜாவின் லட்சியம்.

இந்நிலையில் அவருக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டு, தொடர்ந்து பயிற்சி கொடுக்க முடியாத நிலை உருவாகிறது. இதனால் தனது முன்னாள் மாணவரான சசிகுமாரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். சசியும் மாணவிகளுக்கு சிறப்பான பயிற்சி கொடுத்து, மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற வைக்கிறார்.

கென்னடி கிளப் அணியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இந்திய அளவில் சேரும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தேர்வாளர் முகேஷ் ரத்தோர் அந்த மாணவியிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்கிறார். இதனால் மனமுடையும் அந்த மாணவி தற்கொலைக்கு முயல்கிறார். மற்ற மாணவிகளின் பெற்றோரும் கபடி வேண்டாம் எனக்கூறி தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்கின்றனர். கென்னடி கிளப் அணி ஆளில்லாமல் போகிறது. கென்னடி கிளப்பை மீண்டும் உயிர்ப்பிக்க செய்யும் சசிகுமார் எடுக்கும் முயற்சிகளும், ஊழல் அதிகாரிக்கு எதிராக அவர் நடத்தும் தர்மயுத்தமும் தான் மீதிப்படம்.

விளையாட்டு படங்கள் அனைத்துக்கும் ஒரே டெம்ப்ளேட் தான். கென்னடி கிளப்பும் அதில் இருந்து வித்தியாசப்படவில்லை. ஆனால் உண்மையான கபடி வீராங்கனைகள் களத்தில் இருந்து, இரண்டரை மணி நேரத்திற்கு கபடி போட்டி நடத்தி காட்டியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். தனது முதல் படமான வெண்ணிலா கபடி குழுவில் உள்ளூர் கபடியை காட்டிய காட்டிய சுசீ, கென்னடி கிளப்பில் தேசிய அளவிலான கபடி போட்டிகளை காண்பித்து சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார்.

திரையில் கபடி விளையாடுவது உண்மையான வீராங்கனைகள் என்பதால் எந்த போட்டியும் சினிமாவாக தெரியவில்லை. டிவியில் புரோ கபடி பார்த்த உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது தான் படத்தின் மிகப்பெரிய பிளஸ்.

ஆனால் மிக எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதை என்பதால், இது தான் நடக்கப்போகிறது என முன்னரே தெரிந்துவிடுகிறது. இறுதிச்சுற்று, கனா உள்பட ஏற்கனவே வெளிவந்த பல விளையாட்டு படங்களின் பாதிப்பு கென்னடி கிளப்பில் நிறையவே தெரிகிறது. வில்லன் கதாபாத்திரமும், சசிகுமாருடன் அவருக்கான மோதலும் கிட்டத்தட்ட இறுதிச்சுற்றையே நினைவுப்படுத்துகிறது.

க்ளைமாக்ஸ் காட்சியில் பாரதிராஜா பேசும் வசனங்கள் எல்லாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்து போரடித்து போன ஒன்று. அதுவும் எக்ஸ் மிலிட்டரிமேனான பாரதிராஜா இந்தி தெரியாமல் சசிகுமாரிடம் அர்த்தம் கேட்பதெல்லாம் லாஜிக் பிழையின் உச்சம். ஒட்டன்சத்திரத்தில் கென்னடி கிளப்பிற்காக கபடி விளையாடும் பெண்கள், தமிழ்நாட்டுக்காக தேசிய போட்டியில் கலந்துகொள்வது, ரயில்வே ஊழியரான சசிகுமார் அதற்கு கோச்சாக இருப்பது என ஒரு ஆளே உள்ளே நுழையும் அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் ஏராளம்.

படம் ஆரம்பிக்கும் போதே நேரடியாக கபடிக்குள் சென்றுவிடுகிறார் இயக்குனர். அதுவும் தங்களை கிண்டல் செய்த ஆண்களை கபடி விளையாடி துவம்சம் செய்யும் பெண்களின் ஆட்டம் செம மாஸ். இதை பார்த்ததும், "ஓ படம் சூப்பராக இருக்கும் போல " என நினைக்கும் போதே, சசிகுமார் எண்ட்ரியாகி, ரஜினி ஸ்டைலில் சண்டை எல்லாம் போட்டு, "அப்படி எல்லாம் தப்பு கணக்கு போடாதீங்க" என நமக்கும் சேர்த்து அடி போடுகிறார்.

மாவட்ட கபடி போட்டியில் தஞ்சாவூர் அணிக்கு செம பில்டப் கொடுத்துவிட்டு, அந்த அணியின் கோச்சாக சூரியை கொஸ்ட் ரோல் செய்ய வைத்திருப்பது எல்லாம் கடுப்பேற்றும் காமெடி. ஆனால் கபடி பெண் கலையரசியில் கவிதை காதலன் செம ஆறுதல். மொக்கையாக கவிதை சொல்லி இம்சித்தாலும், கடைசியில் சோலார் ஸ்டார் ராஜகுமாரனாக மாறி சிரிக்க வைக்கிறார்.

பலவீனமான திரைக்கதையுடன் கூடிய இந்த படத்தை தாங்கிப்பிடிப்பது இமானின் இசையும், கபடி கேர்ள்ஸ்சின் உழைப்பும் தான். 'கபடி கபடி' பாடல் பெண்களை ஊக்கப்படுத்தும் அர்த்தமுள்ள 'மகளிர் ஆந்தம்'.

கபடி வீராங்கனைகளாக நடித்துள்ள அனைத்து பெண்களும் இந்த படத்தின் நிஜ ஹீரோயின்ஸ். சசிகுமார், பாரதிராஜா எல்லாம் கெஸ்ட் ரோல் கணக்கு தான். வழக்கம் போல தன்னுடைய அமைதியான நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்கிறார் சசிகுமார். வயதான பயிற்சியாளராக, யதார்த்த மனிதராக தெரிகிறார் பாரதிராஜா.

குருதேவின் ஒளிப்பதிவை நிறையவே பாராட்டலாம். கபடி போட்டிகளை தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார். திரைக்கதை பலவீனமாக இருந்தாலும், தனது கட்ஸ்களால் விறுவிறுப்பாக்கி இருக்கிறார் எடிட்டர் ஆண்டனி.

ஏற்கனவே வந்த பல விளையாட்டு படங்களின் சாயல் இருந்தாலும், 'பெண்கள் கபடி' எனும் ஒன்றை சொல்லில் தனித்து நிற்கிறது கென்னடி கிளப்.

   
 
ஆரோக்கியம்