Back
Home » திரைவிமர்சனம்
Mei Review:ஏழைகள்தான் டார்கெட்.. திகிலூட்டும் உடல் உறுப்பு திருட்டு.. மருத்துவஊழலை தோலுரிக்கும் மெய்
Oneindia | 24th Aug, 2019 01:31 PM

நடிகர்கள் - நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர்,

இசை - பிருத்வி,

இயக்கம் - பாஸ்கர்

சென்னை: மருத்துவத்துறையில் நடைபெறும் குற்றங்களை, திரில்லிங்கான திரைக்கதையில் தோலுரித்து காட்டுகிறது மெய்.

நாயகன் அபினேஷ் சந்திரன் ( நிக்கி சுந்தரம்) அமெரிக்க வாழ் இந்தியர். மருத்துவம் படித்திருக்கும் அபி, தனது தாயின் இறப்பினால் மனதளவில் பாதிக்கப்படுகிறார். அவரை சென்னையில் உள்ள தனது சொந்தக்காரர் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார் அபியின் தந்தை.

சென்னை வரும் அபிக்கு அவரது மாமா ஜார்ஜின் மருந்துக்கடையில் பொழுது போக்குவது தான் முக்கிய வேலை. அங்கு வேலை பார்க்கும், பழைய ஜோக் தங்கதுரை மற்றும் பாலா ஆகியோர் அபிக்கு நண்பர்களாகின்றனர். மருந்துக்கடைக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு பணம் ஏதும் வாங்காமல் வைத்தியம் பார்க்கிறார் அபி. இதனால் பிரபலமாகிறார் பாரின் டாக்டர்.

இதற்கிடையே ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் சார்லியின் மகள் நர்மதா திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதை கண்டித்து போராட்டம் நடத்துகிறார் சமூக அக்கறை அதிகம் கொண்ட மெடிக்கல் ரெப்பான ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கும் அபிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறுகிறது.

இந்நிலையில் மருந்துக்கடையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது பாலாவுக்கு வலிப்பு நோய் ஏற்படுகிறது. அவருக்கு ஒரு ஊசி போட்டு முதலுதவி செய்கிறார் அபி. பிறகு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் பாலா, அடுத்த சில மணி நேரத்தில் இறந்து போகிறார். பாலாவின் சடலத்தை வாங்க மறுத்து உறுப்பினர்கள் போராட்டம் நடத்த, அபி போட்ட ஊசியால் தான் பாலா இறந்துவிட்டதாக பழி சுமத்துகிறார்கள். இதனால் போலி டாக்டர் என முத்திரைக் குத்தப்பட்டு போலீசாரால் கட்டம் கட்டப்படுகிறார் அபி. இந்த சிக்கலில் இருந்து அபி எப்படி தப்பிக்கிறார் என்பதே மீதிக்கதை.

மருத்துவத்துறையில் நடக்கும் ஏராளமான குற்றங்களில் உடல் உறுப்பு திருட்டை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு, அதை திரில்லரிங்கான திரைக்கதையில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாஸ்கர். இதுவரை உயிரை வைத்து பணம் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவத்துறை, இப்போது உடம்பை வைத்து பணம் பார்க்க ஆரம்பித்துவிட்டது என்பதை தோலுரித்து காட்டியிருக்கிறார்.

பாரின் டாக்டர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் அறிமுக நாயகன் நிக்கி சுந்தரம். பார்ப்பதற்கு சத்யராஜையும், அபிதாப் பச்சனையும் சேர்த்து செய்த கலவை போல் இருக்கும் நிக்கிக்கு ஆக்ஷன் காட்சிகள் நன்றாக செட்டாகிறது. இன்னும் கடினமான உழைப்பை போட்டால் நிக்கி சுந்தரம் தமிழ் சினிமாவில் நிச்சயம் தடம் பதிக்கலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் வழக்கம் போல தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார். சின்ன ரோலாக இருந்தாலும் தனக்கான ஸ்பேசை அழகாக எடுத்துக் கொண்டிருக்கிறார். சார்லிக்கு உதவி செய்துவிட்டு, மேனேஜரிடம் திட்டுவாங்கும் இடத்தில் அப்பாவியாக நின்று ஸ்கோர் செய்கிறார்.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் கிஷோருக்கு பெர்பார்ம் செய்ய அதிக இடமில்லை. கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார். வில்லன் பட்டாளத்தில் ஜெயவந்த் மட்டுமே இயல்பாக தெரிகிறார். நிக்கியை கலாய்க்கும் சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார் பழைய ஜோக் தங்கதுரை.

புல்லட் ரயிலை தூக்கி புல்டாஸ்ல உதைச்சு பறக்க விடோணும்... சிங்கிள் திரியில் டபுள் அணுகுண்டு!

பிருத்வியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் ஓரளவுக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். மோகனின் ஒளிப்பதிவு படத்தை தூக்கி நிறுத்துகிறது. நிக்கியின் உயரத்துக்கு தகுந்தமாதிரி ஒவ்வொரு பிரேமையும் வைக்க படாதபாடு பட்டிருப்பார் போல. தேவையில்லாததை நீக்கி, தேவையானதை மட்டும் வைத்து படத்தை செம்மையாக்கிருக்கிறார் எடிட்டர்.

ஒட்டுமொத்த இந்திய மருத்துவத்துறையே கேடு கெட்டு போயிருப்பது போலவும், அதை வெளிநாட்டில் இருந்து ஒரு மருத்துவர் வந்து தான் சரி செய்ய வேண்டும் எனும் கருத்தை சொல்கிறது படம். இங்கேயும் மனிதாபிமானத்துடன் நிறைய மருத்துவர்கள் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் காட்டியிருக்கலாம். இரண்டாம் பாதியின் பெரும்பான்மை பகுதி வரை படம் திரில்லிங்காக இருக்கிறது. சினிமாத்தனமான க்ளைமாக்ஸ் காட்சி தான் இறுதியில் அதை கெடுக்கிறது.

ஒரு நல்ல மெடிக்கல் திரில்லர் படம் பார்த்த உணர்வை தருகிறது மெய்.

   
 
ஆரோக்கியம்