Back
Home » சிறப்பு பகுதி
கேப்டன் விஜயகாந்த் சாரே வாருங்கள்.... பழைய பன்னீர் செல்வத்தை மீண்டும் பார்க்க ஆசை
Oneindia | 26th Aug, 2019 02:28 PM

சென்னை: தமிழ் சினிமா என்றாலே வெள்ளைத் தோல் தான் எடுபடும் என்ற விதிவிலக்கை மாற்றிய ஹீரோக்களின் வரிசையில் ரஜினிகாந்துக்கு பின் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார் என்பது நிதர்சனமான உண்மை.

சண்டைக் காட்சிகளில் அடி தூள் கிளப்பிய விஜயகாந்தை பழைய பன்னீர் செல்வமாக பார்க்க அவரது ரசிகர்கள் ஆசையோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பக்கத்தில் ஒரு சிறிய ஊரில் 1952ஆம் ஆண்டு பிறந்து மதுரையில் வளர்ந்தவர் விஜயராஜ். சிறு வயதிலேயே சினிமா மீது உள்ள ஆர்வத்தால் படிப்பில் நாட்டம் செல்லாமல், தனது தந்தையின் அரிசி அலையில் சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.

பிறகு சினிமாவில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்து தொடர்ந்து முயற்சி செய்து கடைசியில் அதன் பலனாக 1978ஆம் ஆண்டிலிருந்து தமிழ் படத்தில் நடிக்க தொடங்கினர். இயக்குனர் காஜா அவர்கள் விஜயராஜ் என்ற அவருடைய பெயரை விஜயகாந்த் என மாற்றினார்.

பின்னர் அவரது நடிப்பு திறமையால் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஆனார். அவருக்கென்று ஒரு தனி பாணியை ஏற்படுத்தி கொண்டார். சண்டைக்காட்சி என்றாலே நம் நினைவுக்கு வரும் முதல் நபர் விஜயகாந்த். அவர் லெக் ஃபைட்க்கு பிரபலமானவர். ஒரு காலை தரையில் ஊன்றி இன்னொரு காலை டேபிளில் வைத்து ஜம்ப் செய்து, திரும்ப ரிவர்ஸ் எடுத்து வில்லனின் நெஞ்சில் ஒரு கிக் விடுவாரே, வாரே வாவ், மறக்க முடியுமா கேப்டன் சார்.

1990ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரு மகன்கள். அவரின் குடும்பமே அவருக்கு அரசியலிலும் உறுதுணையாக இருந்து வருகிறது.

திரைப்பட ஹீரோ என்றாலே வெள்ளை தோல் தான் எடுபடும் என்ற விதிவிலக்கை மாற்றிய ஹீரோக்கள் வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து தமிழ் திரையுலகில் வெற்றி பெற்றவர் நடிகர் விஜயகாந்த் மட்டுமே. பல விமர்சனங்களையும் தாண்டி தன்னுடைய தன்னம்பிக்கை ஒன்றையே மூலதனமாக வைத்தே, திரையுலகில் வெற்றிக்கொடியை நிலைநாட்டியவர் விஜயகாந்த்.

1979ஆம் ஆண்டில் இனிக்கும் இளமை படம் மூலம் வில்லனாக அறிமுகமானார். 1980களில் கதாநாயகனாக அவரின் வளர்ச்சியை பார்த்து வியக்காதவர்களே இல்லை. அவரின் உள்ளம் எல்லாம் தள்ளாடுதே பாடல் செம்ம ஹிட். பட்டி தொட்டி எல்லாம் ரெகார்ட் பிளேயர்களில் தூள் கிளப்பியது. கருப்பு மனிதர் எந்த ஒரு விமர்சனத்திற்கும் கலங்காமல் தனது நடிப்பின் மூலமே பதிலடி கொடுத்தவர்.

1981ஆம் ஆண்டில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை என்ற படம் சூப்பர்ஹிட். அப்படம் அமிதாப், ஹேமமாலினி, ரஜினி போன்ற பலரை வைத்து ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து மாஸ் கமர்சியல் ஹீரோ எனும் அந்தஸ்தை பிடித்து சாதனை படைத்தவர். வைதேகி காத்திருந்தாள், கேப்டன் பிரபாகரன், அம்மன் கோவில் கிழக்காலே, வானத்தை போல, சின்ன கவுண்டர் போன்ற வெற்றி படங்களின் சொந்தக்காரர்.

விஜயகாந்த் மிகவும் இளகிய மனம் படைத்தவர். அதற்கு உதாரணம் அவர் பல நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள் என பல பேரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி வாய்ப்பளித்துள்ளார். அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பலர் வெற்றியின் உச்சிக்கே சென்றவர்கள். மக்கள் மீதும், சமூக அக்கறையும் அவரின் பல படங்கள் மூலம் 80களிலேயே வெளிப்பட்டது. ரமணா, சுதேசி, பேரரசு, அரசாங்கம் போன்ற படங்கள் அதற்கு சான்று. அவ்வளவு ஏன் நடிகர் சங்கக் கடனை இவர் தலைவராக வந்த பின்பு தான் வட்டியோடு சேர்த்து திரும்ப செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகையே கலக்கிய பல திரை நட்சத்திரங்கள் தனக்கென ஒரு அரசியல் கட்சியை தொடங்கி அதில் வெற்றி பெறுவது என்பது ஒரு அரிதானதாகும். அதில் எம்.ஜி.ஆர் அவர்களை தொடர்ந்து வெற்றி பெற்ற ஒரே திரை நட்சத்திரம் விஜயகாந்த் மட்டுமே.

2005ஆம் ஆண்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். 2006ஆம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.

கலைஞர்.கருணாநிதி, செல்வி.ஜெயலலிதா போன்ற மூத்த அரசியல் தலைவர்களிடையே அவர் நடை போட்ட அழகு அலாதியானது. தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் அவர் எட்டிய வேகம் பாராட்டப்பட வேண்டிய வரலாறு. அவரது உடல் நலம், அவரது மனோபலத்தை குறைத்தாலும் அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் வெற்றியோடு வலம் வர வாழ்த்துக்கள்.

   
 
ஆரோக்கியம்