Back
Home » திரைவிமர்சனம்
Saaho Review : பிரபாஸ், பிரம்மாண்டம், மாஸ் ஆக்‌ஷன்.. ஓஹோ இல்லை இந்த சாஹோ..! - விமர்சனம்
Oneindia | 30th Aug, 2019 07:19 PM

சென்னை: சில நேரங்களில் ராஜாவே சேனாதிபதியாக மாறி போர்க்களம் புக வேண்டியிருக்கும். எதிரிகளை அழித்து போரை வென்று மீண்டும் ராஜாவாக பொறுப்பேற்றுக்கொள்வார். இது தான் சாஹோ படத்தின் ஒன்லைன்.

இந்த ஒன்லைனை, மும்பை, ஆஸ்ட்ரியா, அண்டர்வேர்ல்ட் கிரிமினல்ஸ், அண்டர்கவர் காப், பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகள், மாஸ் ஹீரோயிசம், ரொமான்ஸ் என ஏகப்பட்ட எக்ஸ்ட்ராபிட்டுகளை அள்ளி தெளித்து... சாரி வாரிக் கொட்டி படமாக்கியிருக்கிறார் 'இளம்' இயக்குனர் சுஜித். ஏன் அந்த இளம் எனும் வார்த்தையை குறிப்பிட்டு சொல்ல வேண்டியிருக்கிறது என்றால், குருவித் தலையில் பனங்காய், இல்லை, இல்லை பாறாங்கல்லை வைத்தது போல் ஆகிவிட்டது படத்தின் ரிசல்ட்.

'முதல்ல கதை என்னான்னு சொல்லுப்பா' எனும் உங்க மைண்ட் வாய்ஸ் வெளிய கேட்குது. நாங்க மட்டும் வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம். கதைனு படத்தில் ஒன்றும் பெரிசா இல்லைங்க. அண்டர்வேர்ல்ட் டான்களின் தலைநகரம் வாஜி. அதில் டான்டகளுக்கு எல்லாம் பெரிய டான் ராய் (ஜாக்கி ஷெரஃப்). தனது தொழிலை லீகலாக மாற்றுவதற்காக, ஒரு அமைச்சரை மிரட்டி கையெழுத்து வாங்கி இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்கு வருகிறார். வந்த இடத்தில் விபத்தில் அவரை யாரோ கொன்று விடுகிறார்கள்.

இதையடுத்து ராயின் சாம்ராஜ்யத்துக்கு வெளி உலகுக்கு தெரியாமல் மறைத்து வளர்த்த வந்த அவருடைய மகன் அருண் விஜய் தலைவராக பொறுப்பேற்கிறார். இது மற்றொரு டானான தேவராஜ்க்கு பிடிக்கவில்லை. அருண் விஜய்யை காலி செய்துவிட்டு அந்த இடத்தை பிடிக்க நினைக்கிறார்.

இது ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க மற்றொரு பக்கம் மும்பையில் ஒரு பலே திருடன் எந்த தடயமும் இல்லாமல் பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிடுகிறான். அவனை பிடிக்கும் பொறுப்பு அண்டர்கவர் போலீஸ் அதிகாரியான பிரபாஸிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவரும் ஸ்கெட்ச்சுப் போட்டு, நடுவில் சக போலீஸ் அதிகாரியான ஸ்ரத்தாவுக்கு ரூட்டு போட்டு ரொமான்ஸ் செய்து திருடனை நெருங்குகிறார். ராய் சாம்ராஜ்யத்திற்கு சொந்தமான 2 லட்சம் கோடி ரூபாய் பணத்தை எடுப்பதற்காக ஒரு முக்கிய கருவியை (பிளாக் பாக்ஸ்) அந்த பலே திருடன் அபேஸ் செய்ய திட்டம் போடுவது பிரபாஸுக்கு தெரியவருகிறது.

அந்த பிளாக்பாக்ஸை திருட அருண் விஜய், தேவராஜ், போலீஸ் உயர் அதிகாரி டீம் மற்றும் பலே திருடன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நடக்கிறது. இதில் யார் வெற்றி பெறுகிறார்கள்? உண்மையில் பிரபாஸ் யார் ? என ஏகப்பட்ட டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்து சொல்கிறது சாஹோ.

பாகுபலி வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹோவுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் மூலம் அந்த எதிர்பார்ப்பை ஓரளவுக்கு பூர்த்தி செய்திருக்கிறார் இயக்குனர். பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் போல் பிராமாண்ட கார் ஸ்டண்ட் காட்சிகள், ஜெட்மேன், ஸ்வாட், ஸ்நைப்பர்ஸ், விதவிதமான துப்பாக்கிகள், வானுயர்ந்த கட்டடங்கள் என படம் காட்சிக்கு காட்சி பிரமாண்டத்தின் உச்சம்.

ஆனால் பிராமண்டம் ஒன்று மட்டும் இருந்தால் போதும், மற்றவை எதும் தேவையில்லை என முடிவு செய்துவிட்டே படத்தை எடுத்திருக்கிறார் சுஜீத். மருந்துக்கு கூட லாஜிக் என்பது இல்லவே இல்லை. முதல் திருட்டு சம்பவம் செம மாஸ் பிளானிங். இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் செம. ஆனால் இவ்வளவு பெரிய பொருட்செவில் எடுக்கப்படும் படத்துக்கு கொஞ்சமாவது சுவாரஸ்யம் கூட்டும் வகையில் திரைக்கதை அமைத்திருக்க வேண்டாமா சுஜித்.

பர்ஸ்ட் ஹாஃப்பில், முதல் 20 நிமிடங்களும் கடைசி 10 நிமிடங்களையும் தவிர வேறு எந்த சுவாரஸ்யமும் இல்லை. இரண்டாம் பாதியில் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகள் மற்றும் கடைசி டிவிஸ்ட் மட்டும் தான் சூப்பர். மற்ற இடங்கள் அனைத்து செம போர். அதுவும் பிரபாஸ், ஸ்ரத்தா காதல் காட்சிகள் மிகப்பெரிய வேகத்தடை. சுத்தமாக இருவருக்கும் கெமிஸ்ட்ரியே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். படம் முழுவதும் யாராவது யாரையாவது சாவடித்துக் கொண்டே இருக்கிறார்கள். (நம்மையும் சேர்த்து தான்).

பாகுபலியில் பார்த்த பிரபாஸ் தானா இது எனும் அளவுக்கு முகத்தில் அப்படி ஒரு மாற்றம். தன்னால் முடிந்த அளவுக்கு மாஸ் காட்டியிருக்கிறார். அறிமுகக் காட்சியிலேயே அசால்ட்டாக மாடி மாடியாக ஏறி 500 பேரை, அதுவும் ஜிம் பாய்ஸ், கறிக்கடை பாய்ஸ், உள்ளூர் ரவுடிகள் என விதவிதமாய் போட்டு பின்னியெடுக்கிறார். ஆனால், அத்தனையும் குக்கரின் ஐந்து விசில்களுக்குள் என்பது சுத்தமாக நம்பவே முடியவில்லை. திடீர் திடீரென ஸ்ரத்தாவை லவ்வுகிறார். தனது ரசிகர்கள் மட்டும் திருப்தி அடைந்தால் போதும் என முடிவெடுத்து நடித்திருக்கிறார்.

அழகு பொம்மை போல் வலம் வந்தாலும், ஸ்தரத்தா ஒரு போலீஸ் அதிகாரி. ரொமான்ஸ் மட்டும் தான் தனது ஏரியா என்றில்லாமல், ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்துகிறார். சில சமயங்களில் பிரபாஸ்க்குகே டஃப் கொடுத்திருக்கிறார். ஆனால், பிரபாஸுடனான அவரது உறவு காதலா, இல்லை பழி வாங்குகிறாரா என்ற குழப்பம் பார்வையாளர்களுக்கு அவ்வப்போது ஏற்படுகிறது. அதை இன்னும் கொஞ்சம் இயக்குநர் தெளிவு படுத்தியிருக்கலாம்.

படம் முழுவதையும் பிரபாஸே ஆக்கிரமித்துக்கொள்வதால், சங்கி பாண்டே, அருண் விஜய், ஜாக்கி ஷெரஃப், மந்த்ரா பேடி, நீல் நிதின் முகேஷ், லால் உள்ளிட்டோர் கெஸ்ட் அப்பியரென்ஸ் போல் வந்து போகிறார்கள். அருண் விஜய் மட்டும் சில காட்சிகளில் மாஸ் காட்டுகிறார். அதிலும் அவரது அறிமுகக் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது. முரளி சர்மா பிரபாஸ் கூடவே வருவதால் நிறைய காட்சிகள் இருக்கிறார்.

டமால், டுமீல், படார், டம், டுப் என படம் முழுவதும் காது சவ்வு கிழியும் அளவுக்கு சத்தமாக இருக்கிறது. இதனால் ஜிப்ரானுக்கு தனியே பின்னணி ஸ்கோர் செய்ய தனி வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த கேப்பில் நன்றாக ஸ்கோர் செய்கிறார். 'பேட் பாய்' பாடல் மட்டும் லேட்டஸ்ட் டிரெண்டிங்கில் இடம் பிடிக்கும்.

மதியின் ஒளிப்பதிவு தான் படத்தை தூக்கிப் பிடிக்கிறது. ஒவ்வொரு பிரேமிலும் அத்தனை பிரமாண்டம் காட்டியிருக்கிறார். குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகள் செம மாஸ். அதிலும் க்ளைமாக்ஸ் கார், பைக், ஹெலிகாப்டர், கண்டெய்னர் டிரக் என விதவிதமாஸ் காட்டி தூள் கிளப்பியிருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் சண்டை காட்சிகளில் மட்டும் கலக்குகிறது.

பிராமாண்டம், விஷுவல் எபக்ட்ஸ்களில் செலுத்திய கவனத்தை, கதையிலும், திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால் சாஹோ இன்னொரு பாகுபலியாக கொண்டாடப்பட்டிருக்கும். சில நேரங்களில் ராஜாவே சேனாதிபதியாக மாறி போர்க்களம் புக வேண்டியிருக்கும். எதிரிகளை அழித்து போரை வென்று மீண்டும் ராஜாவாக பொறுப்பேற்றுக்கொள்வார் என்பதை சொல்ல வேறு கதைகளா இல்லை சுஜீத்.

பாகுபலியை நினைத்துக்கொண்டு சாஹோவுக்கு போனால் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும்.

   
 
ஆரோக்கியம்