Back
Home » திரைவிமர்சனம்
Sixer Review: கவுண்டமணி அளவுக்கு இல்லே.. ஆனாலும் இந்த ‘ஆறுமணிக்காரன்’ ஓகே தான்! - சிக்சர் விமர்சனம்!
Oneindia | 31st Aug, 2019 06:19 PM

சென்னை: மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இளைஞனின் காமெடி காதல் கதை தான் சிக்சர் திரைப்படம்.

சின்னதம்பி படத்துல வரும் கவுண்டமணியின் தற்போதை வெர்ஷன் தான் ஹீரோ வைபவ். பகல் முழுவதும் வெளியில் சுற்றும் வைபவ், மாலை 6 மணி அடிக்கும் போது டான் என வீட்டில் இருப்பார். இதனால் அவருக்கு நண்பர்கள் வைக்கும் பட்டப்பெயர் ஆறுமணிக்காரன். அப்பா ஸ்ரீரஞ்சனியும், அப்பா இளவரசும், மகனுக்கு எப்படி கல்யாணம் செய்து வைப்பது என விழிப்பிதுங்கி நிற்கும் போது அந்த பொறுப்பை தானே எடுத்துக்கொள்கிறார் வைபவ்.

ஒரு நாள் மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் போது, வண்டி மக்கர் செய்ய, அப்படியே அதை பீச்சோரம் ஓரங்கட்டிவிட்டு நண்பன் சதீஷுக்கு போன் செய்து தன்னை பிக்பக் செய்ய சொல்லிவிட்டு, கையில் சுண்டல், காதல் ஹேட்போன் என கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்குகிறார் நம்ம ஹீரோ.

அப்போது பார்த்து தொழிலதிபர் ஆர்.என்.ஆர்.மனோகருக்கு கல்லூரி மாணவிகளை மூளைசலவை செய்து அனுப்பும் விமலா ராணியை (எங்கோ கேட்டது போல் இருக்குள்ள... ஆமாங்க அவங்களே தான்) எதிர்த்து சில இளைஞர்கள் பீச்சில் போராட்டம் நடத்துகிறார். அதுவும் கண்ணு தெரியாத நம்ம ஹீரோவை சுற்றி அமர்ந்து கோஷம் போடுகிறது கும்பல். இதனை தனது தொலைக்காட்சிக்காக லைவ் கவரேஜ் செய்கிறார் ஹீரோயின் பல்லக் லல்வாணி.

போராட்டத்தை பார்த்து கடுப்பாகும் வில்லனின் ஆட்கள் போராட்டக்காரர்களை அடித்து உதைக்கிறார்கள். எல்லோரும் தெறித்து ஓட, வைபவ் மட்டும் அசராமல் அமர்ந்திருக்கிறார். சூழ்நிலைகள் எல்லாம் சாதகமாக மாற, மக்கள் தலைவனாக உருவெடுக்கிறார் நம்ம ஹீரோ. இதனால் பல்லக் லல்வாணி வைபவ் மீது இம்பிரஸ் ஆகி காதலில் விழுகிறார். அடுத்த நாள் பகலில் வைபவும் லல்வாணியை நேரில் பார்தது லவ்வ ஆரம்பிக்கிறார். மாலைக்கண் நோய் இருப்பதை மறைத்து டிராமா செய்கிறார். இது எது வரை நீடிக்கிறது ? இவர்களது காதல் என்னாவகிறது என்பது தான் மிச்ச சொச்சப் படம்.

சின்னதம்பி படத்தில் இருந்து கவுண்டமணி கேரக்டரை மட்டும் உறுவி, அதை இன்னும் கொஞ்சம் டெபலவ் செய்து படமாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் சாச்சி. ஆனால் சின்னதம்பி அளவுக்கு இதில் காமெடி இல்லை என்பது தான் வருத்தமான விஷயம். அதற்காக சுத்தமாக காமெடியே இல்லை என்று சொல்ல முடியாது. 10 நிமிட இடைவேளைக்கு ஒருமுறை சதீஷும், வைபவும் சேர்ந்து கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.

இதில் ஹைலைட் காமெடி இளவரசு காட்சிகள் தான். டெராக வந்து உட்காரும் வில்லன் ஏஜேவை பார்த்து பெண் புரோக்கர் வந்திருக்கிறார் என சீரியஸாக கலாய்ப்பது, வைபவின் போனில் லல்வாணியின் காலை ஆன் செய்வது என தான் வரும் காட்சிகளில் எல்லாம் சிக்சர் அடிக்கிறார் இளவரசு. இந்த படத்திலும் சதீஷின் ஒன்லைன்கள் செமையாக ஒர்க்கவுட் ஆகியிருக்கு. சிக்சர் அடிக்காவிட்டாலும், பல பவுன்டரி விளாசுகிறார்.

மாலைக்கண் நோயாளியாக வைபவ் செம பிட். புதிதாக எதுவும் முயற்சிக்காமல் தனக்கு வரும் விஷயங்களை மட்டும் சரியாக செய்து, ஸ்கோர் செய்கிறார் ஆறுமணிக்காரன். கவுண்டமணி அளவுக்கு இல்லாவிட்டாலும், கண்ணு தெரியாமல் ஓரளவுக்கு சமாளித்திருக்கிறார்.

பல்லக் லல்வாணி சில இடங்களில் அழகாகவும், பல இடங்களில் சுமாராகவும் தெரிகிறார். பல தமிழ் படங்களை பார்த்து பழகிய அதே 'லூசு' ஹீரோயின் கேரக்டர் தான். சுமாராக நடித்து கடந்து போகிறார்.

வைபவ், ராதாரவி, கேபிஒய் குரேய்ஷி, சதீஷ், இளவரசு, ஸ்ரீரஞ்சனி என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருந்தும் வெடித்து சிரிக்க ஒரு காட்சியும் இல்லை. பல இடங்களில் உதட்டை தாண்டாத சிரிப்பையே பார்க்க முடிகிறது.

இந்த படத்திற்கு ஜிப்ரான் தான் இசையமைப்பாளர் என்பது மற்றவர்கள் சொல்லி தான் தெரிகிறது. பின்னணியிலும் தனித்துவம் இல்லை, பாடல்களும் கேட்கும் படியாக இல்லை. சிவகார்த்திகேயன் குரலில் ஒலிக்கும் 'எங்கவேன்னா கோச்சின்னு போ' பாடல் கூட சுமார் ரகம் தான்.

பெரிதாக எந்த மெனக்கெடலும் இல்லாமல் ராவாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கேமராமேன் பிஜி முத்தையா. இதனால் ஒரு கமர்சியல் படத்துக்கு தேவையான 'கலர்' இதில் டோட்டலாக மிஸ்ஸிங். எடிட்டர் ஜோமின் படத்தை சுவாரஸ்யமாக கட் செய்திருக்கிறார்.

கான்செப்டை சரியாக எடுத்த இயக்குனர் சாச்சி, அதற்கு சிறப்பான திரைக்கதை அமைத்திருக்கலாம். பல காட்சிகள் இதுநாள் வரை பார்த்து வந்த அதே கிளிஷே. இடைவேளையிலும் பெரிய டிவிஸ்ட் எதுவும் இல்லை. நல்ல கதைக்கரு சுமாராக எடுத்திருக்கிறார்கள். காமெடி செய்வதற்காக மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது, டாய்லெட்டுக்குள் சாப்பாட்டு தண்டை எடுத்துக்கொண்டு போய் நிற்பது என்பதெல்லாம் 'உவ்வே' பீலிங்.

திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் இந்த 'சிக்சர்' ஸ்டேடியத்தை தாண்டி பறந்திருக்கும்.

   
 
ஆரோக்கியம்