Back
Home » திரைவிமர்சனம்
Magamuni Review: எதிர்பாராத திருப்பங்கள்.. நடிப்பில் அசரவைக்கும் ஆர்யா.. மிரள வைக்கும் மகாமுனி!
Oneindia | 7th Sep, 2019 11:18 AM

சென்னை: ஒரே உருவம் கொண்ட ஆனால் நேர்மாறான எண்ண ஓட்டங்களும், வாழ்க்கை முறைகளும் கொண்ட மகாவும், முனியும் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டங்கள் தான் மகாமுனி.

சிறை மனநல மருத்துவமனையில் இருந்து படம் துவங்குகிறது. அங்கே சிகிச்சைப் பெற்று வரும் கைதியான ஆர்யாவின் வினோத நடவடிக்கைகளால் குழப்பமடைகின்றனர் மனநல மருத்துவர்கள். இதனால் அவரது கேஸ் ஹிஸ்டரியைப் படிக்கத் துவங்குகின்றனர். அப்படியே பிளாஷ்பேக்கில் கதை விரிகிறது.

சத்தமில்லாமல் சாமர்த்தியமாக ஸ்கெட்ச் போட்டு சம்பவங்கள் செய்யும் ரௌடியாக மகாதேவன். அவருக்கு மனைவி இந்துஜா. ஒரு மகன் இருக்கிறான். அரசியல்வாதிகளுடனான தொடர்பால் அவர் எப்படியெல்லாம் துரோகங்களைச் சந்திக்கிறார், ஏமாற்றப்படுகிறார் என ஒரு டிராக் போகிறது.

அதே சமயத்தில் விலங்கியல் பட்டதாரியான முனி, இயற்கை விவசாயம், மாணவர்களுக்கு டியூசன், பள்ளிக்கூடம் இல்லாத மலைவாழ் கிராம மாணவர்களுக்கு படிக்க புத்தகங்கள் தருவது, படங்கள் போட்டுக் காட்டுவது என விவேகானந்தர் கொள்கைகளோடு அமைதியான வாழ்க்கை நடத்தி வருகிறார். இவரது வாழ்க்கையில் மஹிமா மூலம் ஒரு பிரச்சினை வருகிறது.

என்கவுண்டர் போடத் துடிக்கும் போலீசிடம் இருந்து தப்பிக்க ஓடும் மகாவும், ஆணவக்கொலை முயற்சியால் உயிருக்கு போராடும் முனியும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றனர். இதனால் அவர்களது வாழ்க்கை எப்படி மாறிப் போகிறது என்பது தான் படத்தின் கதை.

மௌனகுரு படத்திற்குப் பின் எட்டு ஆண்டுகள் கழித்து இந்த மகாமுனியைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். அவரது எட்டு வருட உழைப்பு வீண் போகவில்லை என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. மனதில் தோன்றியதை அப்படியே காட்சியாக்கி இருக்கிறார். பல்வேறு விஷயங்கள் குறித்து படத்தில் பேசியிருக்கிறார். இயக்குனருக்கு போலீஸ் மீது தீராத கோபம் இருக்கும் போல. மௌனகுருவை போல் இதிலும் காவல்துறையை கல்ப்ரிட் ஆக்கியிருக்கிறார்.

இந்த படம் மூலம் வாழ்க்கையை தத்துவார்த்தமா அணுகியிருக்கிறார் இயக்குனர். மகனை அடித்த ஆசிரியர் மீது ஆர்யா எடுக்கும் நடவடிக்கையே அதற்கு சரியான உதாரணம். குழப்பங்கள் இல்லாத விறுவிறுப்பான திரைக்கதையின் கிளைமாக்ஸ் சொதப்பல் தான் மிகப்பெரிய திருஷ்டிபொட்டு. பார்வையாளர்களை ஏமாற்ற நினைத்தாரா அல்லது அவரே குழம்பிப் போய் அப்படி ஒரு முடிவைத் தந்தாரா என்பது சாந்தகுமாருக்கே வெளிச்சம்.

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு நல்ல குடும்பப்படம்.. நிச்சயம் க்ரீன் சிக்னல் தரலாம்!

ஆர்யாவின் திரை வாழ்வில் நான் கடவுளைப் போலவே மகாமுனியும் முக்கியமான படைப்பு. அறிமுகக் காட்சியிலேயே தோற்றத்தில், நடவடிக்கையில் என அலற வைக்கிறார். கோபம், வில்லத்தனம், பாசம், காதல், ஏமாற்றம் என காட்சிக்குத் தேவையான அனைத்தையும் குறைவே இல்லாமல் நிறைவாகத் தந்திருக்கிறார். ஜாலியான ஆர்யா படத்தில் மிஸ்ஸிங் என்றாலும், சத்தமில்லாமல் சில காட்சிகளில் கவுண்டர் கொடுத்து சிரிப்பில் தியேட்டரை அலற வைக்கிறார். இரட்டை வேடம் என்றாலும், இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறான உடல்மொழியைக் காட்டி மனதில் இடம் பிடிக்கிறார். மீண்டும் ஆர்யாவை நல்ல நடிகர் என அடையாளப் படுத்தி இருக்கிறான் இந்த மகாமுனி.

இந்துஜா, மஹிமா என படத்தில் இரண்டு நாயகிகள். இருவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சராசரி மனைவியாக கணவரிடம் சண்டை போடுவது, மகனுக்காக உருகுவது, கணவரின் உயிருக்கு ஆபத்து என பதறுவது என விஜியாகவே வாழ்ந்திருக்கிறார் இந்துஜா. முற்போக்கு சிந்தனைவாதியான மஹிமாவின் கதாபாத்திரம் கவனிக்கப்படும் வகையில் இருந்தாலும், பல்வேறு குழப்பங்களும் கூடவே இருக்கிறது. எதற்காக அவர் கதைக்குள் வந்தார், ஏன் திடீரென காணாமல் போனார் என பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன. ஆனால் சாட்டை படத்தில் பார்த்த அப்பாவி மஹிமாவா என நடை உடை பாவனையில் மிரட்டி இருக்கிறார்.

இளவரசு, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், மதன்குமார், காளி வெங்கட், ஜி எம் சுந்தர், தங்கமணி பிரபு, தீபா, யோகி, ரோகினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் உள்ளது. திறமையான அதே சமயம் பொருத்தமான நடிகர்களின் கதாபாத்திரத்தேர்வு படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது. ஒரு காட்சியில் மட்டுமே வந்தாலும், நினைவில் நிற்கிறார் காளி வெங்கட்.

படத்தின் மிகப்பெரிய பலமே அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு தான். சென்னையாகட்டும், மலை கிராமம் ஆகட்டும் அப்படியே கேமராவுக்குள் கலர் மாறாமல் படம் பிடித்திருக்கிறார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் ஆர்யா ஆற்றைக் கடக்கும் காட்சி, சுடுகாட்டு காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் வாவ் சொல்ல வைக்கின்றன.

அதேபோல் படத்தில் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டிய இருவர் இசையமைப்பாளர் தமனும், எடிட்டர் விஜே சாபு ஜோசப்பும். அதிக நீளமில்லாத காட்சிகள் படத்தை ரசிக்க வைக்கின்றன. பின்னணியில் தனது புதிய சகாப்தத்தை உருவாக்கியிருக்கிறார் தமன்.

ஆர்யாவின் அறிமுகக்காட்சியே படம் நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையைத் தந்து விடுகிறது. திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், ஆடியன்ஸ் மனதில் ஒரு விறுவிறுப்பும், பரபரப்பும் தொற்றிக்கொள்கிறுது. அதேவே நம் கண்கள் திரையைவிட்டு அகாலாதப்படி பார்த்துக்கொள்கிறது. ஆணவக்கொலை, துரோக அரசியல், ரவுடியிசம், ஆன்மிகம், உள்பட நிறைய விஷயங்களை பற்றி பேசுகிறது படம். நடுநடுவே இப்போதைய டிரெண்டிங் பிரச்னைகளையும் லேசாக டச் செய்கிறார் இயக்குனர்.

லைவாக நகரும் படம் க்ளைமாக்ஸ் காட்சியில் அப்படியே ரூட் மாறி பழைய பஞ்சாங்கத்தை பாட ஆரம்பித்துவிடுகிறது. இது மட்டும் தான் படத்தின் மைனஸ். இறப்பது யார், வாழ்வது யார் என்ற குழப்பம் அங்கே உருவாவதை தவிர்க்க முடியவில்லை. அதுவரை மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த படம், "வாம்மா மின்னல்.." ரேஞ்சில் முடிந்துவிடுகிறுது. பாவம் இயக்குனருக்கு அப்போது என்ன அவசரம் வந்ததோ தெரியவில்லை.

மற்றப்படி திறமையான ஒரு இயக்குனருடன், சிறந்த நடிகர்கள் பலர் இணைந்திருக்கும் இந்த மகாமுனி, நிச்சயம் ருசித்து சாப்பிடக்கூடிய நல்ல கனி.

   
 
ஆரோக்கியம்