Back
Home » ஹீரோயின்
தமயந்தியாக மீண்டும் சினிமாவில் கால் பதிக்கும் குமாரசாமி மனைவி குட்டி ராதிகா
Oneindia | 9th Sep, 2019 10:08 AM

சென்னை: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி குட்டி ராதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் நடிக்கப் போகிறார். தமயந்தி படத்தில் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களின் பின்னணியில் கதை நடைபெறுகிறது. அதில் குட்டி ராதிகா இளவரசியாக நடித்துள்ளார். இது ஹாரர் திரில்லர் படமாகும்.

சினிமாவில் பல பேர் சிறு வயதில் நடிக்க வந்து குழந்தை நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர், அப்படி ஜொலிக்கும்போது பேபி ஷாமிலி, பேபி ஸ்ரீதேவி, போன்றவர்களை மறக்க முடியாது. அது போல தான் குட்டி பத்மினி, குட்டி ராதிகா போன்றோர் பல சாதனைகள் செய்த நடிகைகள்.

இயற்கை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பரவலாக கவனம் பெற்ற குட்டி ராதிகா 13 ஆண்டு கால இடைவெளிக்குப் பின் தமிழுக்கு மீண்டும் திரும்புகிறார். இதே படத்தில் ரஜினியின் உயிர் நண்பர் ராஜ் பகதூர் குட்டி ராதிகாவின் தந்தையாக நடிக்கிறார். ராஜ் பகதூர் சில படங்களில் மட்டும் தலை காட்டுவார். அதுவும் சிறந்த கதை அம்சம் கொண்ட கதாபாத்திரம் தனக்கு அமைந்தால் மட்டுமே நடிப்பார்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்குநராக அறிமுகமான இயற்கை படத்தில் சாம், அருண் விஜய், குட்டி ராதிகா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். தாஸ்தோவெஸ்கியின் வெண்ணிற இரவுகள் நாவலைத் தழுவி தமிழுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட இப்படத்தில் குட்டி ராதிகாவுக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்து சொதப்பலான படங்களில் நடித்ததால் 2006ஆம் ஆண்டோடு தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு வெளியேறி திருமண பந்தத்தில் இணைந்தார் குட்டி ராதிகா.

இந்நிலையில் 13 ஆண்டு கால இடைவெளிக்குப் பின், தற்போது நவரசன் இயக்கத்தில் தமயந்தி என்ற ஹாரர் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. மேலும் இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழையும் ரஜினி பட நடிகை! பரபர தகவல்!

படத்தில் குட்டி ராதிகாவை கமிட் செய்தது குறித்து பேசிய இயக்குநர் நவரசன், அருந்ததி, பாகமதி ஆகிய படங்கள் போன்ற ஹாரர் த்ரில்லர் படம் தமயந்தி. இதில் நடிக்க முதலில் அனுஷ்காவை தொடர்புகொண்டேன். அவருக்கு திரைக்கதை மிகவும் பிடித்திருந்தாலும் மற்ற படங்களில் ஒப்பந்தமாகியிருந்ததால் அவரால் நடிக்கமுடியவில்லை.

எனது இரண்டாவது தேர்வு குட்டி ராதிகா. அவரும் இரண்டு கன்னடப் படங்களில் பிஸியாக இருந்தார். இருப்பினும் ஒருமுறை கதையைக் கேளுங்கள் என்று கூறி அவரிடம் கதையை விவரித்தேன். கேட்டபின் தான் நடிப்பதாக உடனே சம்மதித்தார். இதற்காக மற்ற படங்களின் தேதிகளைக் கூட மாற்றியமைத்தார் என்று பெருமையாக சொன்னார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், பெங்களூர், மைசூர், மற்றும் கேரளாவின் சில இடங்களில் நடைபெற்றுள்ளது. இரண்டு வெவ்வேறு காலகட்டங்களின் பின்னணியில் கதை நடைபெறுகிறது. அதில் குட்டி ராதிகா இளவரசியாக நடிக்கிறார். ரஜினிகாந்தின் நண்பர் ராஜ் பகதூர் அவருக்கு அப்பாவாக நடிக்கிறார், என்றார். இப்படம் நவம்பர் அல்லது டிசம்பரில் வெளியாகும் என்று தெரிகிறது. குட்டி ராதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

   
 
ஆரோக்கியம்