Back
Home » ஆரோக்கியம்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
Boldsky | 9th Sep, 2019 03:06 PM
 • ஓமம்

  ஓமத்தில் தைமோல் என்னும் உட்பொருள் உள்ளது. இது தான் ஓமத்திற்கு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது. அதேப் போல் இந்த தைமோல் தைம் என்னும் மூலிகையிலும் உள்ளது. எனவே தான் தைம் மற்றும் ஓமம் இரண்டும் ஒரே மாதிரியான மணத்தைக் கொண்டுள்ளது. ஓமத்தினால் கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமே, அதில் உள்ள தைமோல் தான்.


 • ஆயுர்வேதத்தில் ஓமம்

  ஆயுர்வேத மருத்துவத்திலும், ஓமம் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. வாத உடல் கொண்டவர்கள் ஓமத்தை அன்றாடம் சாப்பிட ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் கப உடல் கொண்டவர்களும், ஓமத்தை சாப்பிடலாம். ஆனால் பித்த உடல் கொண்டவர்கள், ஓமத்தை தவிர்க்க வேண்டும்.


 • ஓம நீர் தயாரிப்பது எப்படி?

  பொதுவாக அனைத்து வகையான மூலிகைகளும் வெறும் சுவைக்காக மட்டும் உட்கொள்ளப் படுவதில்லை. அதனால் ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாலேயே உட்கொண்டு வருகிறோம். அதிலும் ஒரு மூலிகையில் உள்ள சத்துக்களானது உடலால் உறிஞ்சப்படுவதற்கு 'ஊடகம்' தேவைப்படுகிறது. இந்த ஊடகங்ளாவன நெய், பால், தேன் மற்றும் நீர்.

  ஓமத்தில் உள்ள முழு சத்துக்களையும் நீரின் மூலம் எளிதில் பெற முடியும். அதற்கு 2 டீஸ்பூன் ஓமத்தை லேசாக வறுத்து, ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். வேண்டுமானால், ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்தும் பருகலாம். பின் மறுநாள் காலையில் ஓமத்தை நீரில் நன்கு நசுக்கி வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

  இப்போது ஓம நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.


 • இரைப்பைக் குடல் வலி நீக்கி பண்புகள்

  நீங்கள் நாள்பட்ட வாய்வுத் தொல்லையால் கஷ்டப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால், ஓம நீரை தினமும் குடித்து வாருங்கள். இதனால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். வாய்வுத் தொல்லை ஒருவருக்கு ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகள் அல்லது உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்றவை காரணங்களாகும். இப்பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணத்தை ஓம வாட்டர் வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


 • எடை இழப்புக்கு உதவும்

  ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும். எப்போது உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகி, முறையாக வெளியேற்றப்படுகிறதோ, அப்போது உடல் பருமன் அடைவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். ஓம நீரை தினமும் குடித்து வந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகி, உடல் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும்.


 • ஆரோக்கியமான செரிமானம்

  ஓமம் ஒருவரது செரிமான சக்தியை மேம்படுத்தும். பொதுவாக நாம் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டாலோ அல்லது அளவுக்கு அதிகமாக உணவை உட்கொண்டாலோ, வயிற்று உப்புசத்தினால் அவஸ்தைப்படுவோம். அப்போது ஓமத்தை அல்லது ஓம நீரை ஒருவர் உட்கொண்டால், அதில் உள்ள தைமோல், வயிற்றில் செரிமான திரவத்தின் சுரப்பிற்கு உதவி, செரிமான செயல்பாட்டை சீராக்கும்.

  இருப்பினும் நாள்பட்ட செரிமான பிரச்சனையால் கஷ்டப்பட்டு வந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். இல்லாவிட்டால், நிலைமை மோசமாகிவிடும்.


 • கர்ப்பிணிகளுக்கு...

  பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசத்தினால் அதிகம் கஷ்டப்படுவார்கள். ஓம நீரை தினமும் குடித்து வந்தால், இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பிரசவத்திற்கு பின் செரிமானம் சிறப்பாக இருக்கவும், பிரச்சனையில்லா தாய்ப்பால் சுரப்பிற்கும், கர்ப்பையை சுத்தப்படுத்தவும் பல பெண்கள் ஓம நீரைக் குடிக்க பரிந்துரைக்கின்றனர். ஆனால் இதுக்குறித்து எவ்வித அறிவியல்பூர்வ நிரூபணமும் இல்லை மற்றும் மருத்துவர்கள் பச்சை கொடி காட்டாமல் எதையும் கண்மூடித்தனமாக பின்பற்றாதீர்கள்.


 • அசிடிட்டியை எதிர்க்கும்

  அசிடிட்டி என்னும் நிலை, இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தால் ஏற்படுவதாகும். அசிடிட்டி வயிற்றில் கடுமையான எரிச்சலை உண்டாக்கும் மற்றும் சில சமயங்களில் நெஞ்சு, தொண்டை போன்ற பகுதிகளும் எரிச்சலுக்கு உள்ளாகும். ஒருவருக்கு அசிடிட்டியானது சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக கார உணவை உண்பது போன்றவற்றால் ஏற்படுவதாகும். எனவே அளவுக்கு அதிகமாக உட்கொண்டு அசிடிட்டி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், சோம்பு மற்றும் ஓமத்தை ஒன்றாக வாயில் போட்டு மெல்லுங்கள். இல்லாவிட்டால் ஓம நீரைக் குடியுங்கள்.


 • சளி மற்றும் இருமலுக்கு...

  சளி மற்றும் இருமலுக்கான ஒரு பாரம்பரிய வீட்டு வைத்தியம் தான், ஒரு டம்ளர் ஓம நீரைப் பருகுவது. அதிலும் நீரில் ஓமத்துடன், சிறிது துளசி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி பருகினால், நெஞ்சி சளி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
மிகச்சிறிய அளவிலான நறுமணமிக்க ஓர் மூலிகை விதை தான் ஓமம். இந்த ஓமம் அனைத்து வீட்டு சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள். ஓமம் ஆசிய நாடுகளைப் பிறப்பிடமாக கொண்டது. முக்கியமாக இந்தியாவில் ராஜஸ்தான் பகுதியில் பயிரிடப்படுகிறது. இதனால் வட இந்திய பகுதிகளில் ஓமமானது பூரி, கச்சோரி, ரசம், கதி போன்ற பல உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஓம விதைகள் உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. அதில் செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரிசெய்வது வரை பல நன்மைகளை வழங்கும். இதற்காக ஓமத்தை அன்றாட உணவில் சேர்த்து வரலாம். இல்லாவிட்டால் அதனை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்தும் வரலாம்.

   
 
ஆரோக்கியம்