Back
Home » திரைவிமர்சனம்
Love Action Drama Review: குடியினால் கெடும் ஒரு நல்ல காதல்.. லவ் ஆக்ஷன் டிராமா.. விமர்சனம்!
Oneindia | 10th Sep, 2019 06:23 PM

சென்னை: பெண்ணியம் பேசும் நாயகிக்கும், வெட்டியாக ஊர் சுற்றும் நாயகனுக்கும் இடையே நடக்கும் காதல் நாடகம் தான், லவ் ஆக்ஷன் டிராமா.

களவாணி விமல், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆர்யா போல வெட்டியாக ஊர் சுற்றி திரியும் நிவின் பாலி தான் படத்தின் ஹீரோ. சதா குடித்து கொண்டே இருக்கும் நிவினுக்கு, அவரது மாமா மகள் மீது கொள்ள ஆசை. ஆனால் அவரோ, சொந்தத்தில் கல்யாணம் செய்தால் குழந்தை ஊனமாக பிறக்கும் என காரணம் சொல்லி, குடிகார ஹீரோவை கழட்டிவிடுகிறார்.

இந்த சோகத்தின் உச்சியில் இருக்கும் நிவினின் கண்களில் தேவதையாக வந்து காட்சி கொடுக்கிறார் நயன்தாரா. நிவினின் மாமா மகள் ஸ்வாதியின் நெருங்கி தோழி தான் நயன். குணத்தில் பெமினிஸ்டான நயனுக்கும், நிவின் மீது ஒரு ஈர்ப்பு உருவாகிறது. நயனை தேடி நிவினும் சென்னை வர, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். குடி, புகையை நிறுத்தினால் கல்யாணத்துக்கு ஓகே என கண்டிசன் போடுகிறார் நயன். இந்த கண்டிசனை ஓகே செய்து நயனின் கரம் பிடிக்க நிவின் நடத்தும் ஆக்ஷன் டிராமா தான் லவ் ஆக்ஷன் டிராமா.

பல தமிழ் படங்களில் பார்த்த அதே கதை தான். ஆனால் கொஞ்சம் ஜாலியாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன். நயன்தாராவை கரெக்ட் செய்ய, நிவின் பாலி மேற்கொள்ளும் மடத்தனமான ஐடியாக்களும், அது பிளாப் ஆகும் போது அவர் கொடுக்கும் ரியாக்ஷன்களும் ரசிக்க வைக்கின்றன.

ஆனால் படம் ஆரம்பித்ததில் இருந்து சதா குடித்துக்கொண்டே இருக்கிறார்கள் நவினும், அவரது நண்பரும். அவர்கள் சரக்கடிப்பதைப் பார்த்து நமக்கே போதை தலைக்கேறி விடுகிறது. இந்த படத்தை பார்க்கும் மது பிரியர்கள், நிச்சயம் படம் முடிந்ததும் செல்லும் இடம் டாஸ்மாக் பாராகதான் இருக்கும். செம மப்பேத்திட்டிங்க ப்ரோ.

இது மலையாள படமா இல்லை தமிழ் படமா என்ற சந்தேகம் நிச்சயம் படம் பார்ப்பவர்களுக்கு வரும். ஏனென்றால் நிவின் பாலி மட்டும் தான் மலையாளத்தில் பேசுகிறார். நயன்தாரா உள்ளிட்ட மற்றவர்கள் பெரும்பாலும் தமிழில் தான் சம்சாரிக்கிறார்கள். படம் நடப்பது சென்னையில் என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு. இயக்குனர் புத்திசாலி தான். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்க பார்த்திருக்கிறார்.

நிவின் பாலி ஒரு நல்ல நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த படத்தில் அவருக்கு நடித்து அசரடிக்க வேண்டிய அவசியம் இல்லை. குடி குடி என குடித்து, குடிகார இளைஞனாகவே ரொம்ப கேஷுவலாக வாழ்ந்திருக்கிறார். ஆங்காங்கே சின்னச் சின்ன குறும்புகள் செய்து ரசிக்க வைக்கிறார்.

நயன்தாராவுக்கு இதில் வழக்கமான காதல் நாயகி ரோல் தான். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுடன் நடித்த அனுபவத்தை அப்படியே இதில் அப்ளை செய்திருக்கிறார். நிறைய சீன்களில் தேவதை போலத் தான் தெரிகிறார். நயன் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி.

இவர்கள் இருவரை தவிர நிவினின் நண்பராக வரும் அஜு வர்கீஸ் சில காட்சிகளில் சிரிப்பையும், பல காட்சிகளில் கடுப்பையும் வரவைக்கிறார். நயன்தாரா தோழிகளாக வரும் தன்யா உள்ளிட்டோருக்கு இந்த படத்தில் நிறைய ஸ்கோப் தந்திருக்கிறார் இயக்குனர். அதை அவர்கள் சரியாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள்.

படத்தில் வரும் பாடல்கள் எதுவுமே முழுசாக இல்லை. அதனால் ஷான் ரஹ்மான் இசையை முழுமையாக ரசிக்க முடியவில்லை. பாடல்களை பின்னணி இசையாக ஒலிக்கவிட்டவிதம் அருமை.

கேரளாவின் இயற்கை அழகு, சென்னையின் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை, டாஸ்மாக் பார் என அனைத்தையுமே கண்குளிர காட்டுகிறார்கள் இரட்டை ஒளிப்பதிவாளர்கள் ஜோமோன் டி ஜான் மற்றும் ராபி வர்கீஸ். விவேக் ஹர்ஷனின் எடிட்டிங்கில் எல்லாக் காட்சிகளிலும் அம்புட்டு நீநீநீ...ளம். இதனால் படத்தை எப்ப சார் முடிப்பாங்க என மைண்ட் வாய்ஸ் வெளியில் கேட்கும் அளவுக்கு பார்வையாளர்கள் புலம்புகிறார்கள்.

படத்தில் நயன்தாரா, நிவின் பாலி இடையேயான சண்டைகளும், காதல் குறும்புகளும் முதலில் ரசிக்க வைக்கின்றன. ஆனால் அது தொடர்ந்து கொண்டே இருப்பதால் ஒரு கட்டத்தில் சலிப்படைய செய்கிறது. அதுவும் நிவின் பாலி குடித்துக்கொண்டே இருப்பது குடிகாரர்களையே மூச்சுமுட்ட வைத்துவிடும். படத்தின் தலைப்பில் மட்டும் லவ் இருக்கிறது. படத்தில் கொஞ்சம் ஆக்ஷனும், நிறைய டிராமாவும் தான் இருக்கிறது.

மொத்தத்தில் லவ் ஆக்ஷன் டிராமா... சைக்கலாஜிக்கல் ட்ரொமா.

   
 
ஆரோக்கியம்