Back
Home » மீம்ஸ்
பளிச் பளிச் மீம்ஸ்.. புளிச் புளிச் சிரிப்பு.. ஒரு சீரியஸ் பிசினஸ் பாஸ்!
Oneindia | 11th Sep, 2019 05:34 PM

சூப்பர் ஸ்டார் முதல் சுள்ளான் வரை, ஸ்டாலின் முதல் இபிஎஸ், ஓபிஎஸ் வரை சமூக வலைதளங்களில் வறுபடாமல் தப்பித்தவர்களே கிடையாது. மோடி, அமீத் ஷா என எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல.

கருப்புப்பூனைப் படை, கமாண்டோ படை என உச்சகட்ட பாதுகாப்போடு உலா வரும் உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் தலைகள் வரை யாருமே இந்த மீம் மேக்கர்சின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது.

கொழுப்பெடுத்த கோழி பாய் கடை முன்னாலேயே வந்து பரதநாட்டியம் ஆடின மாதிரி சிலர் வீணாக வாய் கொடுத்து மீம் கிரியேட்டர்சுக்கு வெத்தலை பாக்கு வைத்துவிடுவார்கள். எச். ராஜா, எஸ்.வி. சேகர், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் என பலருக்கு வாய்தான் வடைசட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக மாநிலத் தலைவராக இருந்து தமிழிசை மீம் கிரியேட்டர்களின் நிரந்தர கண்டென்ட் பொக்கிஷம் போல இருந்தார்.

ஆமை கதை, யானை கதை என அடிக்கடி சொல்லி அண்ணன் சீமானும் இந்த லிஸ்ட்டில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டே இருப்பார். கோமியம் குடித்தால் கோடீஸ்வரன் ஆகலாம் என்ற ரேஞ்சுக்கு வடநாட்டு பாஜக அமைச்சர்களும் அலைப்பறையை கிளப்பிக் கொண்டே இருப்பார்கள். இதுபோதாதென்று மீ டாக்கிங் டூ மீ என்று நம்ம நித்தியானந்தா வேறு பல பர்னிச்சர்களை சில்லுசில்லாக உடைத்துவிடுகிறார்.

பூனை மேல மதில் மேல என்று ஸ்டாலின் சொன்னாலும், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழிசை சொன்னாலும் அவை எல்லாம் எப்படி உடனே மீம்சாக மாறுகின்றன. இதையெல்லாம் கேட்டு உடனே சுடச்சுட மீம்ஸ் போடுபவர்கள் எல்லாம் யார் ? இதனால் இவர்களுக்கு என்ன லாபம்? யார் சொல்லி இவர்கள் இப்படி எல்லாம் செய்கிறார்கள்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு தோன்றியிருக்கலாம்.

வழக்கமான ஊடகங்களான செய்தித்தாள்கள், வாரப் பத்திரிகைகள், டிவி சேனல்கள் போன்றவற்றில் வெளியாகும் செய்திகள் பலகட்ட தணிக்கைக்கு பிறகே வெளியில் வரும். எனவே அதில் தனிநபர் தாக்குதலுக்கோ, தனி நபரை நேரடியாக கிண்டல், கேலி செய்வதற்கோ பெரிதாக வாய்ப்பு இருக்காது. அந்த வாய்ப்பை ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ஹலோ, ஷேர்சாட் போன்ற நவீன சமூக வலைதளங்கள் வழங்குகின்றன. இங்கு யாரைப் பற்றி வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அளவிற்கு சுதந்திரம் இருக்கிறது. இந்த சுதந்திரம் கொடுக்கும் தைரியத்தில்தான் மீம்ஸ் கலாச்சாரமே பிறந்திருக்கிறது.

இந்த மீம்ஸ் கலாச்சாரம் வைரலாக ஆரம்பித்த காலத்தில் இதனால் அதிக பாதிப்பை அடைந்தவர்கள் வைகோவும், விஜயகாந்தும். வைகோ ஒரு ராசியில்லாதவர் என்ற தோற்ற மாயையை இந்த மீம்ஸ்கள் தொடர்ந்து கட்டமைத்துக் கொண்டே இருந்தன. அதேபோல விஜயகாந்த் என்ற ஹீரோவின் இமேஜை உடைத்து, அவரை ஒரு காமெடி பீஸ் என்ற அளவிற்கு மக்கள் மனதில் பதிய வைக்க மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன

50 ஆண்டுகால நீண்ட அரசியல் பயணத்திற்கு சொந்தக்காரரான ஸ்டாலினை துண்டு சீட்டு, சுடலை என்று இந்த மீம்ஸ்கள் கேலி செய்கின்றன. தனது கடைசி காலங்களில் கருணாநிதியையும் மீம்ஸ்கள் விட்டுவைக்கவில்லை. கருணாநிதி மறைந்துவிட்டார் என்ற வதந்தி உலா வரும் போதெல்லாம் உடனே அதையொட்டிய மீம்ஸ்களும் உலா வர ஆரம்பித்துவிடும். அம்மா சாப்பிட்ட இட்லி பற்றிய மீம்ஸ்கள் எக்கச்சக்கம். எம்.ஜி.ஆர் மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், அவரை இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் கிழித்து தொங்கவிட்டிருப்பார்கள்.

தனிநபர்கள் என்று இல்லாமல் பொதுவான நிகழ்வுகளும் மீம்ஸ்களாக மாறுகின்றன. நயன்தாராவை தரிசித்த அத்திவரதர் முதல் அசோக் லேலண்ட் உற்பத்தி குறைப்பு வரை முக்கிய பேசு பொருட்கள் அனைத்திற்குமே மீம்ஸ் போடப்படுகின்றன.

சரி, மீண்டும் பழைய கேள்விக்கு வருவோம். இந்த மீம் கிரியேட்டர்கள் யார்? இதனால் இவர்களுக்கு என்ன லாபம்? இன்று இருக்கும் தொழில்நுட்ப வசதியில் கொஞ்சம் டெக்னிக்கல் விஷயம் தெரிந்தால் இருக்கின்ற இலவச டூல்களை வைத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் மீம்ஸை உருவாக்கிவிட முடியும். எனவே ஐடி இளைஞர்கள் நிறைய பேர் தங்களின் ஓய்வு நேரத்தில் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துகளை மீம்ஸ் வடிவில் உருவாக்கி பதிவிடுகின்றனர். அதில் சிறப்பானவை வைரலாகும்போது அவர்களுக்கு நட்பு வட்டத்தில் ஒரு பிரபல்யம் கிடைக்கிறது. இப்படி பேர் புகழுக்காக மீம்ஸ் போடும் ஒரு கூட்டம் இருக்கிறது.

இவர்களைத் தவிர தொழில்முறை மீம் கிரியேட்டர்கள் இருக்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில் மீம்ஸ்களுக்கு இருக்கும் வரவேற்பை உணர்ந்துகொண்ட அரசியல் கட்சிகள் இவர்களை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஒரு கட்சியின் தலைவரையோ, அந்த கட்சியின் செயல்பாடுகளையோ குறிவைத்து தொடர்ந்து மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என வைரலாக்கப்படும். இன்று 24 மணி நேர செய்தி சேனல்கள் வந்துவிட்டதால் பெரும்பாலும் முக்கிய தலைவர்களின் பேச்சுகள் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதனை உன்னிப்பாக கவனித்து அதில் அவர்கள் சொல்லும் கருத்துகளையும், பேசும் போது ஏற்படும் தடுமாற்றங்களையும் வைத்து சுடச்சுட மீம்ஸ் தயாரித்துவிடுகிறார்கள். இவர்களுக்கு இதற்கென கணிசமான தொகை கட்சிகளால் வழங்கப்படுகின்றன. எனவே கரும்பு தின்னக் கூலி போல இந்த வேலையை செம்மையாக செய்கின்றனர்.

இந்த மீம்ஸ்களை பதிவேற்றம் செய்வதற்கென பிரத்யேக சமூக பக்கங்களை நடத்துகின்றனர். அதில் லட்சக்கணக்கான இளைஞர்களை ஃபாலோயர்களை வைத்துக் கொண்டு, அதற்கும் தனியாக காசு வாங்கிவிடுகின்றனர். தேர்தல் அல்லாத காலங்களிலும் தங்கள் பக்கங்களை ஆக்டிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மோட்டார் வாகன சட்டம், சரியும் பொருளாதாரம் என கரண்ட் ட்ரெண்டில் இருக்கும் விஷயங்களைப் பற்றி மீம்ஸ் போட்டுக் கொண்டே இருப்பார்கள். இதில் கிடைக்கும் லைக்ஸ், ஷேர்களை பின்னாளில் செய்ய வேண்டிய இடத்தில் அறுவடை செய்துகொள்கிறார்கள்.

ஆக... சுருங்கச் சொன்னால், மீம்ஸ் என்பது ஒரு தங்கச் சுரங்கம்... மேஜர் சுந்தரராஜன் பாணியில் சொல்வதானால்.. Its a Golden Mine.. நாம் பார்த்து சிரித்து மகிழ்ந்து பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு மீம்ஸின் பின்னாலும் ஒரு பிசினஸ் இருக்கிறது என்பதுதான் எதார்த்தம்.

- கௌதம்

   
 
ஆரோக்கியம்