Back
Home » திரைவிமர்சனம்
விஜயகாந்த், அர்ஜூன் படங்களை ஞாபகப்படுத்தும் காப்பான் - சினிமா விமர்சனம்
Oneindia | 21st Sep, 2019 10:01 AM

சென்னை: 'அயன்'என்ற வெற்றிப்படத்துக்கும் 'மாற்றான்'என்ற ஆவெரேஜ் படத்துக்கு பின்னர் சூர்யாவும் இயக்குனர் கே.வி. ஆனந்தும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் இது. திரைக்கதை அமைப்பதில் - பட்டுக்கோட்டை பிரபாகர், கபிலன் வைரமுத்து மற்றும் கே வி ஆனந்த் மூவரும் இணைந்து தான் செயல் பட்டனர் என்று சொன்னாலும் - கே.வி ஆனந்த் அவர்களுடைய முந்தைய படங்கள் , காட்சிகள் , திருப்புமுனை சுவாரஸ்யங்கள் நம்மை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. அவருடைய மேக்கிங் என்ற ஒன்றை எதற்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டார். கேமரா மேன் கே.வி ஆனந்த் - இயக்குனர் கே.வி ஆனந்த் - இரண்டும் கலந்த மூளை சில சமயங்களில் அவரை குழப்பம் அடைய செய்கிறது. என்ன தான் ஷாட் பியூட்டி அழகாக இருந்தாலும் அவருடைய முந்தைய படங்கள் - நமக்கு ஞாபகம் வருவது தான் இந்த படத்தின் மைனஸ். இன்றைய தமிழ் சினிமா ட்ரெண்டிங் விவசாயம் பற்றி பெரிய ஹீரோக்கள் பேசுவது.

இதில் சூர்யா கொஞ்சம் வித்யாசமாக ஆர்கானிக் விவசாயம் பற்றி பேசுகிறார். கிராமத்தில் வசிக்கும் கதிர் (சூர்யா) ஓர் ஆர்கானிக் விவசாயி. அடடே அவ்வளவு சமூக அக்கறையா என்று புல்லரிப்படைய வேண்டாம். அவர் விவசாய டிப்ஸ் கொடுப்பது சிகப்பு துண்டு போட்டு கொள்வது சில காட்சிகளே .. ஆனால், உண்மையில் அவர் ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று தான் அடுத்த ட்விஸ்ட் . அது ட்விஸ்ட் தானா என்பதை ரசிகர்கள் பார்த்து நெளியும் பொழுது - பாக் கிரௌண்ட் ஸ்கோரிங் காப்பாற்றுகிறது.

பிறகு இந்தியப் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையில் இணைகிறார். பிரதமர் பதவி என்றாலே ப்ராப்ளம் தான். ஆபத்துகள் வரும்போது ஹீரோதானே காப்பாற்ற வேண்டும். எல்லாம் நம் விருப்பபடியே நடக்கிறது. ஆனால் ரெண்டரை மணி நேரத்துக்கு நாம் மாக்ஸிமம் அடுத்து அடுத்து வரும் காட்சிகளை எளிதாக கணித்து விட முடியும்.

ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பிரதமர் மோகன்லால் கொல்லப்பட, அவரது மகன் ஆர்யா நாட்டின் பிரதமராகிறார். விளையாட்டு தனமாக இருக்கும் ஆர்யாவுக்கும் தீவிரவாதிகளால் ஆபத்து வருகிறது , சாயிஷாவைத் தீவிரமாகக் காதலிக்கும் சூர்யா தீவிரவாதிகளைக் கொன்று நாட்டின் நலன் காக்கிறார். சாயிஷாவும் சூர்யாவும் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் - ஆர்யா உடன் இருக்கும் போது - என்ன தான் நடிப்பு என்றாலும் தியேட்டரில் சில நக்கலான கமெண்ட்ஸ் வரத்தான் செய்கிறது .

சாயிஷாவுக்கு சூர்யாவை சுற்றி வருவதைத் தவிர ஒரு வேலையுமில்லை. அனால் நளினமாக நடனம் ஆடி பாடல்களில் மயக்குகிறார். பாடல்கள் மனதில் ஒட்டவில்லை என்பது கொஞ்சம் வேதனை தான்.

மோகன்லால் காஸ்டியூம் கன கச்சிதம் ஒரு காட்சியில் அவர் காதல் கதை சொல்லி , அம்மா பாசம் பற்றி விளக்கி பிறகு நாட்டுப்பற்றுடன் முடிப்பது கைதட்டல்களை வரவைக்கிறது. ஆர்யா, சத்தியமா உங்க போர்சனெல்லாம் பயங்கர போர்யா. ப்ரைம் மினிஸ்டர் நாற்காலியில் உட்கார்ந்து காபி குடிப்பது , ஜாலியாக சரக்கு அடிப்பது இவையெல்லாம் பெரிதாக ஒட்டவில்லை இருந்தாலும் கொடுத்த வேலையை கட்சிதமாக

முடித்து உள்ளார்.

டைட்டிலில் இசையமைப்பாளர் என்று ஹாரிஸ் ஜெயராஜின் பெயர் வந்ததைத் தாண்டி பாடல்கள் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. பி.ஜி .எம் செய்து அவர் பேரை காப்பாற்றிக்கொண்டது மனதுக்கு ஆறுதல்.

'கனாக் கண்டேன்','அயன்','கோ'ஆகிய மூன்று சொல்லிக்கொள்ளும்படியான படங்களுக்குப் பின்னர்,'மாற்றான்','அநேகன்','கவண்'ஆகிய மூன்று டிப்ளமேட்டிக் படங்களைக் கொடுத்திருக்கும் கே.வி.ஆனந்துக்கு 'காப்பான்'மூலம் என்ன நடக்க போகுதோ தெரியவில்லை. சூர்யா ரசிகர்கள் இந்த படத்தை காப்பாற்றுவார்களா , அல்லது வேறு மாஜிக் செய்து படத்தை வெற்றி பெற செய்யபோகிறார்களா தெரியவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த சரத்,விஜயகாந்த், அர்ஜூன் படக் கதைபோல இருக்கிறதே என்று பல பேர் இடைவேளையில் பேசிக்கொண்டது ஒருபுறம் இருக்க - இந்த கதை என்னுடையது என்று கே வி ஆனந்த் மீது கேஸ் போட்டு ஒருத்தர் நடத்தினாரே - அந்த மகானை நினைத்து பலர் சிரித்து கொண்டனர்.

விஜயகாந்த் காலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுந்து பல அட்டகாசங்களைச் செய்துகொண்டிருந்தனர். அவர்களை நாடு புகுந்து விளாசினார் விஜயகாந்த். பிறகு அர்ஜுன் கொஞ்ச நாள் பயங்கரவாதிகளோடு பயங்கரமாக மோதிக்கொண்டு தேசபக்தியை வளர்த்தார். மணிரத்னம் சார் ரோஜா படத்தில் பல விசயங்கள் சொன்னார். சரத்குமார் துப்பாக்கியுடன் சுட்டு பலரை வீழ்த்தினார். இப்போது அந்தப் பொறுப்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யாவின் கரங்களில் கொடுத்துள்ளார் கே வி ஆனந்த்.

இதற்கு நடுவில் அங்கங்கே இயற்கை விவசாயம், தஞ்சை டெல்டாவில் மீத்தேன் போராட்டம், பூச்சிகளை வைத்து உயிரியல் யுத்தம் என பல விஷயங்களைச் சொல்லி ஸ்வாரசிய படுத்த நினைத்தாலும் - பார்க்கும் மக்களுக்கு டோஸேஜ் அளவு சரி இல்லை என்பது போலே உட்கார்ந்து இருந்தார்கள்.

பொம்மன் இராணி - செய்த கதாபாத்திரமோ அம்பானி - சொல்லாமல் சொல்கிறார்களா , அல்லது மோடி அவர்கள் கதாபாத்திரத்தில் நடித்தது மோகன்லால் என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா ?

எது எப்படியோ கே வி ஆனந்த் ஒரு திறமைசாலி - பன்முகம் கொண்டவர். அவர் எடுக்கும் படங்களில் இன்னுமும் நிறைய வித்யாசங்கள் தேவை . அவருடைய அடுத்த படமும் இப்படி தான் காட்சிகள் நகரும் என்று யாரும் கணிக்க முடியாத அளவுக்கு காட்சிகள் திரைக்கதையில் இருக்கு வேண்டும் .

சமுத்திரகனி -பூர்ணாவின் காதல் காட்சிகள் சிறியதாக இருந்தாலும் அழகாக அமைந்தது ஒரு போனஸ். அப்படி நிறைய போனஸ் காட்சிகள் , சுவாரஸ்யங்கள் , இன்னும் இன்னும் நிறைய தேவை கே வி சார்.

மாஸ் ஹீரோஸ் வைத்து கிளாஸ் படம் செய்யும் அத்தனை தகுதிகளும் கே வி ஆனந்தத்துக்கு இருக்கிறது . மொத்தத்தில் கண்டிப்பாக தியேட்டர் போய் பார்க்க வேண்டிய படம்தான் இந்த 'காப்பான்'.வித் பாப்கார்ன்.

   
 
ஆரோக்கியம்