Back
Home » பேட்டி
செந்தமிழ்ல பேசி நடிக்க கொஞ்சம் கஷ்டமா இருந்திச்சி - சாம்ஸ் ஸ்பெஷல் பேட்டி
Oneindia | 24th Sep, 2019 01:23 PM

சென்னை: திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தில நடிச்சதுக்கு பாராட்டு கிடைக்க முழுக்க முழுக்க டைரக்டர் சுதர் சார் தான் காரணம். ஏன்னா இந்த மாதிரியான காமெடியான கேரக்டருக்கு இந்த மாதிரி தமிழ்ல பேசினாதான் எடுபடும்னு நினைச்சிகிட்டு இந்த கேரக்டரை உருவாக்கி இருக்காரு என்று தன்னுடைய அனுபவங்களை நம்முடைய சினிமா அனுபவங்களை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார் நடிகர் சாம்ஸ்.

நடிகர் சாம்ஸ் இது வரையிலும் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இவருடைய பெயர் சொல்லும் வகையில் அமைந்த படங்கள் என்று சொன்னால், அறை எண் 305ல் கடவுள், மனம் கொத்தி பறவை மற்றும் கிங் ஆகிய படங்கள் தான்.

அதிலும் அறை எண் 305ல் கடவுள் படத்தில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வெலை செய்யும் ஜாவா சுந்தரேசன் என்ற கேரக்டரில் நடித்த பிறகு சாம்ஸுக்கு, ஜாவா சுந்தரேசன் என்ற பெயரே நிலைத்துவிட்டது. அந்த படத்திற்கு பின்பு எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், இன்றைக்கும் இவரை திரையில் பார்த்தால் ஜாவா சுந்தரேசன் என்ற பெயர் தான் நினைவுக்கு வரும்.

அதே போல் மனம்கொத்தி பறவை படத்தில், இவரும் பரோட்டா சூரியும் செய்யும் காமெடி படம் முழுக்க சரவெடியாக வெடிக்கும். அடுத்ததாக இவருடைய திறமையை நன்கு பயன்படுத்திக் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவருடைய காஞ்சனா 2 மற்றும் மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய இரு படங்களிலும் லாரன்ஸுடன் இணைந்து காமெடியில் கலக்கியிருப்பார்.

தற்போது திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற முழுக்க முழுக்க காமெடி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ஜாவா சுந்தரேசன் என்ற சாம்ஸ் தன்னுடைய சினிமா அனுபவங்களை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நான் இப்பொழுது திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தில நடிச்சிக்கிட்டு இருக்கேன். எல்லோரும் சொல்றது போல், என்னுடைய சினிமா கேரியரில் இது ஒரு நோட்டபில் படம்கிறது நிச்சயம். அந்த படத்துல இருக்கிற திருட்டு கும்பல்ல நானும் ஒரு ஆள். இதுல என்ன காமெடின்னா நாலு மக்கு பசங்களும் ஒரு பொண்ணும் சேர்ந்தகிட்டு கிரிக்கெட் வேர்ல்டு கப்பை ஆட்டைய போடுறதுக்கு பிளான் பண்றது தான் கதையே.

இதுல எங்க குரூப்புக்கு தலைவன் பார்த்திபன் சார் தான். அவருக்கு கீழ் நாலு அடியாளுங்க. அதில் மூணு ஆம்பளைங்க ஒரு பொண்ணு. பார்த்திபன் சார் தனியா வந்தாலே அதகளம் பண்ணுவார். இதுல நாங்களும் கூட சேர்ந்துகிட்டு அட்ராசிட்டு பண்ணியிருக்கோம்.

இந்தப் படத்தில இன்னோரு விஷயம் என்னன்னா நான் படம் முழுக்க தமிழ்லயே பேசி நடிச்சிருக்கேன். இதுல என்ன கொடுமைன்னா தமிழன் தமிழ் படத்துல தமிழ்ல பேசி நடிக்கிறதே ஒரு பெரிய சாதனையா மாறிடிச்சி. இதுல நான் செந்தமிழ்ல பேசி நடிச்சிருக்கேன்.

அதுல ஒரு டயலாக், அற்புதமாக காரியம் முடிந்தது, வாருங்கள் அணிச்சல் (கேக்) வெட்டி கொண்டாடுவோம், ன்னு பேசி நடிச்சிருக்கேன். அதே மாதிரி க்ளைமாக்ஸ் சீன்ல இன்னொரு டயலாக், எங்கடா வச்சிருக்கீங்க உங்க காரைன்னு கேக்குறதுக்கு, நான், மகிழுந்து நிறுத்தத்தில் இருக்கிறது அப்பிடின்னு சொல்லுவேன்.

அதை கேட்டு போலீஸ் ஆஃபிஸர், என்னவோ வேற பாஷை பேசுறதா சொல்வாங்க. பதிலுக்கு நான் யோவ் இது தமிழ் மொழியா அப்பிடின்னு சொல்லுவேன். இந்த படத்துல மொதல்ல ஒரு ஐடியா இருந்திச்சி. என்னன்னா நான் பேசுற தமிழ் பாஷையை புரிஞ்சிக்கிறதுக்கு படத்துல சப்டைட்டில் போடலாமான்னு தோணிச்சி. அப்புறம் தான் எல்லோரும் தெரிஞ்சிகிடட்டுமேன்னு விட்டுட்டோம்.

இந்த படத்தில நடிச்சதுக்கு பாராட்டு கிடைக்க முழுக்க முழுக்க டைரக்டர் சுதர் சார் தான் காரணம். ஏன்னா இந்த மாதிரியான காமெடியான கேரக்டருக்கு இந்த மாதிரி தமிழ்ல பேசினாதான் எடுபடும்னு நினைச்சிகிட்டு இந்த கேரக்டரை உருவாக்கி இருக்காரு. இதப்பத்தி மொதல்லயே என்கிட்ட கேட்டாரு. எனக்கு ஒரு சின்ன தயக்கம் இருந்திச்சி.

ஏன்னா, செந்தமிழ்ல பேசி நடிக்க பட்டுன்னு டைமிங் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டமா இருந்தது. உதாரணத்துக்கு, காரை எங்கடா நிப்பாட்டி இருக்கீங்கன்னு கேக்குறதுக்கு, கார் பார்க்கிங்ல நிப்பாட்டி இருக்குன்னு சொல்றது ஈசியா வந்துடும். ஆனா செந்தமிழ்ல மகிழுந்து நிறுத்தத்தில் இருக்கிறது அப்பிடின்னு சொல்றதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஆனா அதுலேயும் டைரக்டர் சார் சுவராஸ்யத்தை கூட்டியிருக்காரு.

திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற நல்ல படத்தை டைரக்டர் சுதர் கொடுத்திருக்கார். ரசிகர்கள் தான் இதை வெற்றிப்படமாக்கணும். ரசிகர்கள் இதை வெற்றிப்படமா கொடுத்தால் தான் அடுத்தடுத்து இந்த மாதிரியான படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள் என்றார் சாம்ஸ்.

   
 
ஆரோக்கியம்