Back
Home » திரைவிமர்சனம்
100 % காதல் - ஆடியன்ஸ்க்கு 100 % பொறுமை முக்கியம்
Oneindia | 4th Oct, 2019 09:16 AM

சென்னை: எந்த ஒரு படைப்பும் வெளியாகும் காலகட்டம் மிக மிக முக்கியம். சுட சுட இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப எடுத்தால்தான் இளைய தலைமுறை ரசிகர்களை கவரும். இன்றைய காதல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தலங்களில் சுடச்சுட பறிமாறப்படுகிறது. அவர்களின் ரசனைக்கேற்ப படம் எடுத்தால் மட்டுமே வெற்றியடையும். தெலுங்கில் 2011ஆம் ஆண்டில் நாக சைதன்யா தமன்னா நடிப்பில் வெளியான 100% லவ் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த 100 % காதல். இந்த படம் 2011ஆம் ஆண்டில் காலகட்டத்தில் தமிழில் வெளியாகி இருந்தால் நாம் ஏற்கும் அளவிற்கு இருந்திருக்கும் போல. ஏனெனில் படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் வரை அனைத்தும் பத்து வருசம் முன்னதாக எடுக்கப்பட்டது போல படமாக்கப்பட்டிருக்கிறது.

மலையாளத்தில் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிட்டனர். வங்காள மொழியிலும் இந்த படம் ஒரு ரவுண்டு சுற்றியது. பல மொழிகளில் சுற்றிய பிறகு இதை தமிழில் இயக்கி இருக்கிறார் சந்திரமௌலி. இந்த படத்தில் ஜி வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே, நாசர், தம்பி ராமையா, அப்புக்குட்டி, ஜெயசித்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

100% காதல் படத்தின் கதை, ஷாலினி பாண்டே ஜி வி.பிரகாஷ் இருவருக்கும் இடையில் உள்ள காதல், அதை தாண்டி அவர்களை சேர விடாமல் தடுக்கும் அவர்களின் ஈகோ என நாம் பார்த்து பழக்கப்பட்ட புளித்துப்போன அரதப் பழசான கதைக்களம் தான் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.

முன்னரே நாம் குஷி படத்தில் ஈகோ என்ற ஒரு விஷயத்தை பார்த்து ரசித்து விட்டோம். அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் உள்ள வேறுபாடு திரைக்கதை மட்டும் தான்.

100 % காதலின் போர் அடிக்கும் திரைக்கதை நம்மை பல இடங்களில் எழுந்து போக வைத்து விடுகிறது. அப்பா அம்மா இல்லாமல் வளரும் கதாநாயகி கல்லூரி படிப்புக்காக ஜி வி.பிரகாஷ் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார். அங்கு அவர்களுக்குள் ஏற்படும் காதல் என்று கதை செல்கிறது. முதல் பாதியில் குழந்தைகள் காமெடி என கதை நகர்ந்தாலும் இரண்டாவது பாதி நம்மை தலை சுற்ற வைகிறது.

அதுவும் கதாநாயகி தொப்புள் தெரிய வேண்டும் என்பதற்காக ஆடை வடிவமைப்பு செய்து, ஜி.வி.பிரகாஷுடன் குரூப் ஸ்டடி செய்ய விடுகிறார்கள் இந்த நவீன யுகத்தின் பெற்றோர்கள்.

நாசர், ஜெயசித்தரா, தம்பி ராமையா, ஆர்.வி.உதயகுமார், தலைவாசல் விஜய், ரேகா, அப்புக்குட்டி போன்ற பெரிய நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும் அவர்களை பெரிதாக பயன்படுத்தவில்லை என்பது தான் வருத்தமே.

இந்த படத்தில் மற்றொரு சுவாரஸ்யமான விசயம், அஜய் என்ற கதாபாத்திரத்தில் மயில்சாமி மகன் நடித்திருக்கிறார். படத்தில் ஹீரோவை ஹீரோயின் கோபப்படுத்த, அடிக்கடி அஜய் இஸ் கிரேட் என்று சொல்லி கொண்டே இருக்கிறார். பரிதாபத்திற்குரிய நிலையில் அந்த கதாபாத்திரம் முடியும் பொழுது சிரிப்பு வர வைக்கிறது.

சுவராஷ்யமற்ற திரைக்கதை மற்றும் கல்யாண செட்டில் குடும்பங்கள் ஒன்றிணைவது போல் முடியும் காட்சிகள், ரொம்ப அபத்தமான அரத பழசான கதை நம்மை வெறுத்து போக வைத்து விடுகிறது.

படத்தில் நன்றாக உள்ள ஒரே விசயம் படத்தின் முதல் பாதி குழந்தைகள் லூட்டி மட்டும் தான். தற்போதைய டிரெண்ட் தெரியாமல் எடுக்கப்பட்டதே படத்திற்கு மிகப்பெரிய நெகடிவ் ஆக கருதப்படுகிறது.

அடிக்கடி ஹீரோ சிகரெட் பிடிப்பதும் அதற்கு தனது மாமன் மகள் உதவுவதும் முகம் சுளிக்க வைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஹீரோவை பார்த்து மாமா மாமா என்று பாசமழை பொழிகிறார். இந்த மாமன் மகள் காதல் கலாச்சாரத்தை வைத்து இன்னும் 100 படங்கள் வரத்தான் போகிறது போல தோன்றுகிறது.

வேல்முருகன் ஒரு பாடலில் வந்து பாட, பல ஐட்டம் டான்சர்ஸ் ஆடுவதும் டிவியில் வேண்டுமானால் ட்ரெண்ட் ஆக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கதைக்கு எந்த பாட்டும் ஒத்து போக வில்லை சரியான முறையில்.

சுவாரஷ்யமான திருப்பங்கள், அதிரவைக்கும் சண்டை காட்சிகள், மிரள வைக்கும் ஸ்க்ரீன் பிளே இப்படி எதுவுமே இந்த படத்தில் மருந்துக்கு கூட கிடையாது. சரி பரவாயில்லை காதல்+காமெடி ROMCOM என்று சொல்லப்படுகிற ரொமான்டிக் காமெடி ஒர்க் அவுட் ஆகிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

பாலு இஸ் கிரேட், அஜய் இஸ் கிரேட் என்று அடிக்கடி இந்த படத்தில் வசனங்கள் வரும். உண்மையை சொல்லப்போனால் பொறுமையாக இந்த படத்தை முழுவதுமாக தியேட்டரில் பார்த்தால் ஆடியன்ஸ் இஸ் கிரேட்.

பல வித்தியாசமான படங்கள் செய்யும் ஜி வி.பிரகாஷ் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும். நெத்தியடி அடிக்க வேண்டும் என்று துடித்து கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் மிகவும் எளிமையாகவும் இளமையாகவும் அறிவு ஜீவியாகவும் தோன்றும் ஜிவி தனது மெனக்கெடுதலை எந்த விதத்திலும் குறைத்து கொள்ள வில்லை என்பது மட்டுமே உண்மை.

கவர்ச்சியான சில காட்சிகள் இருப்பதினாலும், இளமை துள்ளலான வசனங்கள் இருப்பதினாலும் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் மற்றும் சில பல இளவட்டங்களுக்கு கண்டிப்பாக ஒன் டயம் வாட்ச் என்டர்டைன்மெண்ட் இந்த 100% காதல். ஆனா பொறுமை முக்கியம் பாஸ்.

   
 
ஆரோக்கியம்