Back
Home » செய்தி
ஓடும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தம் அடித்த பயணி... எச்சரிக்கை அலாரம் அடித்ததால் பீதி!
Oneindia | 10th Oct, 2019 08:23 AM

திருச்சி: தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென்று கிளம்பிய புகையால் பயணிகள் பீதி அடைந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பயணி ஒருவர் கழிவறையில் புகைபிடித்ததால் இந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்ததாக தெரியவந்தது.

மதுரையில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் பகல் நேரத்தில் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில் திருச்சி மற்றும் கொடைரோடு ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். மேலும் இந்த ரயிலில் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் பயணிகள் அமர்வதற்கு சொகுசான இருக்கைகள் மற்றும் நவீன கழிப்பறைகள் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மதுரை, திருச்சி, சென்னையைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் தினமும் இந்த ரயிலில் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு தேஜஸ் ரயில் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. மாலை 4.50 மணிக்கு திருச்சி வந்ததும் பயணிகளை ஏற்றிக் கொண்டு, 5.05 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. திருச்சி ரயில் நிலையத்தை கடந்து செல்லும் போது, ரயிலின் சி.10 சேர் கார் பெட்டியின் கழிப்பறை பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

தீ விபத்து ஏற்பட்டால் உடனே எச்சரிக்கும் அலாரம் ரயிலில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் புகை வெளியேறியதும் எச்சரிக்கை அலாரம் ஒலிக்க ஆரம்பித்தது. அதிர்ச்சியடைந்த சி-10 பயணிகள், தங்களது பெட்டியில் தீ விபத்து நிகழ்ந்து விட்டது என்று எண்ணி, அந்த பெட்டியில் இருந்து மற்ற பெட்டிகளுக்கு தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு பதறியடித்து ஓடினர்.

அவர்களை பார்த்ததும் மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகளும் அதிர்ச்சியடைந்ததுடன், நடந்த விவரத்தை கேட்டறிந்தனர். இதனால் அவர்களும் பயத்தில் ஆழ்ந்தனர். மேலும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். ரயில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரிய தீ விபத்து ஏற்பட்டு விடுமோ? என்று பீதியடைந்தனர்.

இதனிடையே பயணிகள் சிலர் என்ஜின் டிரைவர்களுக்கு செல்போன் மூலம் வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவே அவர்கள் உடனடியாக ரயிலை நிறுத்தினர். பின்னர் புகை வெளியேறிய சி.10 பெட்டிக்கு தொழில்நுட்ப குழுவினர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை.

கழிப்பறையில் பயணி யாரோ புகைப்பிடித்தபோது அதில் இருந்து வெளியேறிய புகை அப்பகுதியில் சூழ்ந்ததால், தீ விபத்து ஏற்பட்டதாக பயணிகள் எண்ணியுள்ளது தெரியவந்தது. ரயில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளதால் புகை வெளியேற முடியாமல் அப்படியே சூழ்ந்து நின்றதும், ஏ.சி.யில் சிறிய மின்கசிவு ஏற்பட்டிருந்தாலும் இது போன்று புகை வெளியேறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் தொழில்நுட்ப குழுவினர் பயணிகளிடம் தெரிவித்தனர்.

பின்னர் 15 நிமிட தாமதத்திற்கு பிறகு ரயில் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றது. தேஜஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டால் உடனே அறியும் வகையில் எச்சரிக்கை அலாரம் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. லேசான புகை வெளியேறினாலும் கூட உடனே அலாரம் ஒலித்து விடும்.

தொழில் நுட்ப குழுவினர், பயணிகள் சுதாரித்து செயல்படுவதற்காகவே இந்த நவீன கருவி பொருத்தப்பட் டுள்ளது. இந்தநிலையில் புகை பிடித்ததால் புகை வெளியேறி அலாரம் ஒலித்தது பயணிகள் மத்தியில் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே கழிப்பறையில் புகைப்பிடிக்கும் பயணிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் வைத்து கண்காணிப்பதோடு, ரயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். அப்பேற்பட்ட சூழ்நிலையில் தேஜஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதா? தொழில்நுட்ப கோளாறால் இந்த புகை கிளம்பியதா? என்பதை ரயில்வே அதிகாரிகள் தெளிவுபடுத்தவில்லை. அதேநேரத்தில் பயணிகளிடையே பீதியை தவிர்க்க இந்த யுக்தியை அதிகாரிகள் கையாண்டார்களா என்பது புதிராகவே உள்ளது.

   
 
ஆரோக்கியம்