Back
Home » உலக நடப்புகள்
கார்த்திகையில் அசைவம் சாப்பிட்டால் அடுத்த பிறவியில் புழு பூச்சியாக பிறப்பார்களாம்!
Boldsky | 8th Nov, 2019 01:41 PM
 • கார்த்திகை மாதம்

  ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் பிறக்கப்போகிறது. கார்த்திகை மாதம் என்றாலே இந்துக்கள் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, அதிலும் ஐயப்ப பக்தர்களுக்கும், முருக பக்தர்களுக்கும் நினைவுக்கு வருவது மாலை போட்டு விரதமிருப்பது தான். கார்த்திகை 1 ஆம் தேதி விடிந்த உடனே, ஐயப்ப பக்தர்களும், முருக பக்தர்களும் அரக்க பறக்க குளித்து முடித்து அருகிலுள்ள கோவில்களுக்கு சென்று, குருசாமியின் கையால் பயபக்கியுடன் மாலை போட்டுக் கொள்வதுதான். இது காலம் காலமாக நடந்து வருவது தான். இவை தவிர கார்த்திகை மாதம் எவ்வளவு புனிதமான மாதம் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


 • முருகன்

  இம்மாத பவுர்ணமி தினத்தில் விரதம் இருந்து சிவபெருமானையும், முருகப்பெருமானையும் வழிபட்டால், இருவரின் பூரண அருளாசி நமக்கு கிட்டும் என்று நான்மறைகள் கூறுகின்றன. முருகனுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவை என்று வேதங்கள் சொல்கின்றன. ஒன்று விசாகம். இந்த நட்சத்திரத்தில் தான் முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்தது. மற்றொன்று கார்த்திகை நட்சத்திரம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறிகளாக வெளிப்பட்டு, சரவணப்பொய்கையில் குழந்தையாக முருகப்பெருமான் தவழ்ந்த போது, கார்த்திகை பெண்கள் அவரை எடுத்து வளர்த்ததால், கார்த்திகை நட்சத்திரமும் முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரமாக விளங்குகிறது.


 • தெய்வீக சக்தி

  திரிலோக சஞ்சாரியான நாரத முனிவர், தொடர்ந்து 12 ஆண்டுகள் கார்த்திகை விரதத்தை மேற்கொண்டு சிவபெருமானை வழிபட்ட காரணத்தினால் தான், நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு செல்லும் தெய்வீக சக்தி கிடைக்கப்பெற்றார்.


 • மகாவிஷ்ணு

  காக்கும் கடவுள் மஹாவிஷ்ணு எடுத்த முதல் அவதாரமான மச்ச அவதாரம் நிகழ்ந்ததும் சாட்சாத் கார்த்திகை மாதத்தில் தான். இம்மாதத்தில் மஹாவிஷ்ணுவை துளசியால் அர்ச்சித்து வழிபாடு செய்தால், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். இளம் பெண்ணின் கைவிரல் போல் தோற்றமளிக்கும் காந்தள் மலர் அதிக அளவில் பூப்பதும் இந்த மாதத்தில் தான். இம்மாதத்தில் வரும் துவாதசி தினத்தன்று அன்ன தானம் வழங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.


 • அசைவம் கூடாது

  கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள் என்பது ஐதீகம். மேலும் இம்மாதத்தில் அசைவு உணவுகளை உண்பவர்கள், மறு ஜென்மத்தில் புழு பூச்சிகளாக பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.


 • மகாலட்சுமி அவதாரம்

  கார்த்திகை மாதத்தில் மஹாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படும் சாளக்கிராமங்களுக்கு செய்யப்படும் பூஜையானது, ஆயிரம் மடங்கு பலனைத் தரும் சக்தி வாய்ந்ததாகும். அது மட்டுமல்ல மஹாலட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றியதும் கார்த்திகை மாதத்தில் தான்.


 • சோமவார விரதம்

  இம்மாதத்தில் வரும் சோமவார விரதம் சிறப்பு வாயந்ததாக கருதப்படுகிறது. இந்த சோமவார தினங்களில் மாலையில் சிவபெருமானுக்கு நடைபெறும் சங்காபிஷேகத்தை தரிசிப்பது மிகச்சிறப்பாகும். கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் என்றைக்கும் மகிழ்ச்சி பெருகும்.


 • கார்த்திகை தீபம்

  கார்த்திகை மாதத்தில் ஆலயங்களிலும் தீபம் ஏற்றி வைப்பதும், வீடுகளில் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் விளக்கேற்றி வைப்பதும், அனைவரது வாழ்க்கையையும் ஒளிமயமாக்கும். இம்மாதம் முழுவதும் விளக்கேற்ற முடியாதவர்கள், துவாதசி, சதுர்த்தசி மற்றும் பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது தீபமேற்ற வேண்டியது அவசியமாகும்.


 • கிரிவலம்

  படைப்பு கடவுளான பிரம்மாவுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டியில், எம்பெருமான் ஈசன் ஆதியந்தம் இல்லாமல் ஜோதி வடிவாக நின்று காட்சியளித்த மாதம். அந்த நாளே கார்த்திகை தீபத் திருநாளாக இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்மாதத்தில் கிரிவலம் வருவது மிக சிறப்பானதாகும். மேலும், கிரிவலம் வரும்போது மழை பெய்தால் அந்த மழையில் நனைந்தபடியே கிரிவலம் வந்தால் தேவர்களின் முழு ஆசியும் கிட்டும். கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தன்று அனைத்து தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாக புராணங்கள் சொல்கின்றன. அதோடு மஹாவிஷ்ணுவோடு மஹாலட்சுமியும் கிரிவலம் வருவதாக ஐதீகம்.
கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்வதால், இம்மாதத்திற்கு விருச்சிக மாதம் என்றும் பெயருண்டு. கார்த்திகை மாதத்தில் பெரும்பாலும், கருமேகங்கள் சூழ்ந்துகொண்டு அதிகளவு மழைபொழிவை தரும். இதனாலும் இம்மாதத்திற்கு கார்த்திகை என்று பெயர் வந்தது எனலாம். கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் சூரியன் உதயமாகும் நேரத்தில், காவிரியில் நீராடுவது சிறப்பாகும். இதற்கு முடவன் முழுக்கு என்று முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர். ஐப்பசி மாதத்தில் நீராட முடியாதவர்கள் கூட, கார்த்திகை முதல் நாளில் காவிரியில் நீராடினால், ஐப்பசியில் துலாஸ்தானத்தில் நீராடிய பலன் கிட்டும்.

MOST READ: பணக்கஷ்டங்களால் மனக்கஷ்டமா? இந்த பரிகாரங்களை பண்ணுங்க கை மேல் பலன் கிடைக்கும்...

கார்த்திகை மாதம் விரத மாதம் ஐயப்ப, முருக பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருப்பார்கள். இந்த மாதத்தில் அசைவு உணவுகளை உண்பவர்கள், மறு ஜென்மத்தில் புழு பூச்சிகளாக பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம், கலியுக தெய்வமான முருகன் மற்றும் ஐயப்பனுக்கு மட்டும் பிடித்த மாதம் கிடையாது. காக்கும் கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கும் உகந்த மாதமாகும். கார்த்திகை மாதத்தில், சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால், சந்திரனின் ஒளி மிகவும் குளிர்ச்சியாகவும், அதிக பிரகாசத்துடனும் இருக்கும். இதன் காரணமாகவே, மற்ற மாத பவுர்ணமியை விட கார்த்திகை பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பொதுவாக தமிழ் மாதங்கள் அனைத்துமே, அந்தந்த மாதங்களில் வரும் பவுர்ணமி தினத்தன்று எந்த நட்சத்திரத்தின் அருகில் சந்திரன் இருக்கிறதோ, அந்த நட்சத்திரன் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. அதே போல், ஒவ்வொரு மாதத்திற்கு பல்வேறு சிறப்புகளும், கோவில்களில் பல்வேறு திருவிழாக்களும், பண்டிகைகளும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போலவே, கார்த்திகை மாதமும் பல்வேறு பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்றுள்ளது.

   
 
ஆரோக்கியம்