Back
Home » செய்தி
அயோத்தி.. அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன? நீதிபதிகள் எதில் முரண்பட்டனர்? முழு விவரம்
Oneindia | 9th Nov, 2019 09:02 AM
 • கூட்டு வழிபாடு

  நீதிமன்றங்களுக்கு வழக்கு வருவதற்கு முன்பு, இந்த இடம் இந்துக்களும், முஸ்லிம்களும் கூட்டாக வழிபாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட நிலம். முஸ்லிம்கள் உள் பிராகாரத்தில் உள்ள பாபர் மசூதி தங்கள் பிரார்த்தனைகளை நடத்தினர், இந்துக்கள் வெளிப்புற முற்றத்தில் வழிபாடு நடத்தினர். இருப்பினும், இந்த நிலம் ராமரின் பிறப்பிடத்தை குறிக்கிறது என்பது நீண்டகாலமாக இந்துக்கள் நம்பிக்கையாக இருந்தது. பாபர் மசூதியைக் கட்டுவதற்கு முன்பாக இந்த இடத்தில் கோவில் இருந்தது என்பதும் அவர்கள் நம்பிக்கை.


 • ராமர் சிலை

  பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில், பிரிட்டிஷ் அரசு இந்து மற்றும் முஸ்லீம் வழிபாட்டு பகுதிகளை வரையறுக்க இப்பகுதியில், வேலி அமைத்தது. 1949ம் ஆண்டு டிசம்பரில், திடீரென மசூதிக்குள் நுழைந்த இந்து குழு ஒன்று ராமர் பிறப்பிடம் என்று நம்பப்படும் மசூதியின் மத்திய பகுதியில் சிலையை நிறுவியது. 1949 சம்பவத்தைத் தொடர்ந்து, இந்து மற்றும் முஸ்லீம் பிரிவினரால் நில உரிமை பிரச்சினை ஏற்பட்டதால், அந்த பகுதி சீல் வைக்கப்பட்டது.


 • அலகாபாத் நீதிமன்றம்

  பல ஆண்டுகளாக வகுப்புவாத பதட்டங்கள் உருவாக ஆரம்பித்து, 1992ம் ஆண்டு, டிசம்பரில் 20,000 க்கும் மேற்பட்ட கர சேவகர்ள் இணைந்து பாபர் மசூதியை இடித்தது. இதற்கிடையில், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளில், நான்கு உயர் நீதிமன்றத்தில் அப்போது நிலுவையில் இருந்தன (தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வழக்கு 1990ல் திரும்பப் பெறப்பட்டது). வழக்குகள் ஆரம்பத்தில் பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் நடந்தாலும், அவை இறுதியில் வாபஸ் பெறப்பட்டு 1989 இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முழு பெஞ்ச் விசாரணைக்கு மாற்றப்பட்டன.


 • முத்தரப்பு

  இந்த வழக்கை இறுதியில் நீதிபதிகள் எஸ்.யு கான், சுதிர் அகர்வால் மற்றும் தரம் வீர் சர்மா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து தீர்ப்பளித்தது. அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக, விரிவான தீர்ப்புகளை எழுதினர், அவை ஒட்டுமொத்தமாக 8,000 பக்கங்களுக்கு மேல் தாண்டின என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மூன்று நீதிபதிகளும் சர்ச்சைக்குரிய சொத்தின் பகிர்வு தொடர்பான முடிவு உட்பட பெரும்பாலான விஷயங்களில் ஒரே மாதிரி உடன்பட்டனர்.


 • ஒரு மனதாக தீர்ப்பு

  வழக்கில் தொடர்புள்ள முக்கிய கட்சிதாரர்கள், அதாவது இந்து கட்சிகள், முஸ்லீம் கட்சிகள் மற்றும் நிர்மோகா அகாரா ஆகியவற்றுக்கு சர்ச்சைக்குரிய சொத்தில் கூட்டு உரிமை உள்ளது என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்தது. சொத்து மூன்று வழிகளில் சமமாக பிரிக்கப்பட வேண்டும் என்று பெஞ்ச் ஒருமனதாக கூறியது. ஒவ்வொரு கட்சிதாரருக்கும் மூன்றில் ஒரு பங்கு சொத்து உரிமையாகும்.


 • யாருக்கு எது

  தற்காலிக சிலை வைக்கப்பட்டிருந்த மசூதி உள்ள பகுதி இந்துக்களுக்கு ஒதுக்கப்படும் என்று பெஞ்ச் உத்தரவிட்டது. ராமரின் பிறப்பிடமாக இந்துக்கள் நம்புவதை மதித்து, நீதிமன்றம் இந்த ஒதுக்கீட்டை வழங்கியது. ராம் சபுத்ரா மற்றும் சீதா ரசோய் கட்டமைப்புகளைக் கொண்ட வெளி முற்றத்தில் உள்ள சொத்தின் ஒரு பகுதி நிர்மோஹி அகாராவுக்கு ஒதுக்கப்பட்டது. முஸ்லீம் வழக்குதாரர்களுக்கு, சொத்தின் மீதமுள்ள பகுதிகள் (உள் மற்றும் வெளி முற்றத்தில்) தரப்பட்டது. மூன்றில் 1 பங்கு என்பதால், அதற்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும்.


 • கருத்து வேற்றுமைகள்

  அனைத்து பிரிவினரும் மற்றவர்களுக்கு, தங்கள் பகுதிகளில் இருந்து, வெளியேறும் மற்றும் நுழைவு உரிமைகளை அனுமதிக்க வேண்டும். இது சம்பந்தமாக, ஒருவருக்கொருவர் உரிமைக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்பின் சில அம்சங்களில் 3 நீதிபதிகள் நடுவே கருத்து வேற்றுமை இருந்தது. இறுதித் தீர்ப்பில் அது சிறிதும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இந்த கருத்து வேற்றுமைகள் முக்கியமானவை.


 • பாபர் மசூதி எப்படி அமைந்தது

  பாபர் மசூதியை கட்டும் பொருட்டு இந்து கோவில் போன்ற கட்டமைப்பு இடிக்கப்பட்டதாக நீதிபதிகள் அகர்வால் மற்றும் ஷர்மா ஆகியோர் நம்பினர். இதற்கு ஆதாரமாக அகழாய்வு அறிக்கையை அவர்கள் சுட்டிக் காட்டினர். ஆனால், இந்த விஷயத்தில் நீதிபதி எஸ்.யூ.கான் வேறு கருத்து வைத்திருந்தார்.
  "மசூதியை நிர்மாணிப்பதற்காக எந்த கோவிலும் இடிக்கப்படவில்லை. மசூதி கட்டப்படுவதற்கு மிக நீண்ட காலத்திலிருந்து முற்றிலும் இடிபாடுகளில் கிடந்த கோயில்களின் இடிபாடுகளுக்கு மேல்தான் மசூதி கட்டப்பட்டது." என்று அவர் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.


 • இஸ்லாம் கொள்கைக்கு எதிரானது

  நீதிபதிகள் இடையே மற்றொரு கருத்து வேறுபாடும் இருந்தது. அது, யார் பாபர் மசூதியை கட்டினார் என்பதுதான். முகலாய பேரரசர் பாபரின் உத்தரவின் பேரில் இந்த மசூதி கட்டப்பட்டது என்று நீதிபதிகள் கான் மற்றும் ஷர்மா முடிவு செய்தாலும், நீதிபதி அகர்வால், "இது 1528 இல் பாபரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை" என்று தெரிவித்தார். பாபர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக நீதிபதி ஷர்மா நம்பினார். ஆனால், "இந்த கட்டிட அமைப்பு இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு எதிராக கட்டப்பட்டது என்றும், எனவே இதை ஒரு மசூதியாக பார்க்க முடியாது" என்றும் நீதிபதி ஷர்மா கருத்து தெரிவித்தார்.


 • உச்சநீதிமன்றம்

  இந்த தீர்ப்பை ஏற்க 3 தரப்பும் உடன்படவில்லை. அனைத்து தரப்பினரும் இறுதியில் உச்ச நீதிமன்றத்தை நாடினர். உச்சநீதிமன்றம் 2011 ல் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த விவகாரத்தின் இறுதி விசாரணைகள் இந்த ஆண்டு ஆகஸ்டில் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் தொடங்கி, அக்டோபர் நடுப்பகுதி வரை தினசரி அடிப்படையில் தொடர்ந்தன. இந்த வழக்கின், தீர்ப்பு அக்டோபர் 16 அன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், நவம்பர் 9ம் தேதியான இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எந்த மாதிரி தீர்ப்பை வழங்கினர் என்பது இப்போது அறிய வேண்டியது அவசியம்.

2010, செப்டம்பர் மாதம், அலகாபாத் உயர்நீதிமன்றம், சன்னி வக்ஃப் வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய முத்தரப்புக்கும், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப் பகுதியை மூன்று பாகங்களாக பிரித்து உரிமை வழங்கி தீர்ப்பளித்தது.

ஆனால் இந்த தீர்ப்பில் எந்த தரப்புமே திருப்தியடையவில்லை. இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்படி அலகாபாத் உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது என்பது பற்றி ஒரு பிளாஷ் பேக் போய் வரலாம்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அத்வானி 1990களில் நடத்திய ரத யாத்திரை.. ப்ளாஷ்பேக்

   
 
ஆரோக்கியம்