Back
Home » ஆரோக்கியம்
பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்!
Boldsky | 20th Jan, 2020 10:09 AM
 • பூண்டு

  பூண்டு, சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த ஒன்று. பன்றிக்காய்ச்சலை தடுப்பதில் பூண்டு சிறந்தது என்பது நிரூபணமாகியுள்ளது. பூண்டில் உள்ள அல்லிசின், உடலில் ஆன்டி-ஆக்சிடன்ட் ஆற்றலை ஊக்கப்படுத்துகிறது. இதன்மூலம், உடலில் இருக்கும் பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கிருமிகள் அழிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. எனவே, தினமும் காலை வெறும் வயிற்றில் 2 பல் பூண்டை சாப்பிட்டுவிட்டு, வெதுவெதுப்பான நீரை குடித்தால் நோய் எதிர்ப்பாற்றாலை அதிகரிக்க செய்யலாம்.


 • ஜின்ஸெங்

  பன்றிக்காய்ச்சலை தடுப்பதில் ஜின்ஸெங் வேரும், அதன் சாறும் மிகுந்த பயனளிக்கும் என்பது ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம், கிருமி தொற்று உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்காமல் பாதுகாத்திட முடியும். தினமும், ஜின்ஸெங் வேரை பயன்படுத்தி டீ போட்டு குடித்து வந்தால் பன்றிக்காய்ச்சல் ஏற்படாமல் சுலபமாக தடுத்துவிடலாம். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


 • துளசி

  துளசி செடியில் எண்ணிலடங்கா மருத்துவ பலன்கள் உள்ளன. துளசியின் மருத்துவ குணங்கள் தொண்டை மற்றும் நுரையீரலில் உள்ள கிருமிகளை வெளியேற்றி சுத்தப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் வலுசேர்க்கும். இதன்மூலம், பன்றிக்காய்ச்சல் ஏற்படாமல் தடுத்திடலாம். தினமும் காலை 5 துளசி இலைகளை சாப்பிடுதன் மூலம் நல்ல பலனை பெற முடியும் என்கின்றனர் வல்லுனர்கள்.


 • நெல்லிக்காய்

  வைட்டமின் சி அதிகமாக உள்ள நெல்லிக்காய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து விடுபட நெல்லிக்காய் சாப்பிடுவது சிறந்தது. தினமும் 3 முதல் 4 நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம். இதன் மூலம், பன்றிக்காய்ச்சலில் இருந்து உங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.


 • ஆலிவ் இலைகள்

  ஆலிவ் பழம் மற்றும் ஆலிவ் ஆயிலின் வியக்க வைக்கும் பலன்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆலிவ் இலைகள் எண்ணற்ற பலன்களை தன்னுள் வைத்துள்ளது என்பது சிலருக்கு தான் தெரிந்திருக்கும். இந்த இலைகளில் உள்ள பாலிஃபீனால் மற்றும் ஃப்ளேவோனாய்டு ஆகியவை பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளான குமட்டல், குளிர்காய்ச்சல் மற்றும் தலைவலி ஆகியவற்றுடன் சண்டையிட உடலுக்கு பெரிதும் உதவுகிறது. சில ஆலிவ் இலைகளின் சாற்றை எடுத்து தொடர்ந்து சாப்பிட்டு வர பன்றிக்காய்ச்சலை அருகே கூட வர விடாமல் தடுத்திடலாம்.


 • மஞ்சள் பால்

  இயற்கையாகவே மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இதில் உள்ள இயற்கை ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சளி, காய்ச்சல், நோய் தொற்றுகள் போன்ற பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்க உதவக்கூடியவை. நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க மஞ்சளை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்கலாம். ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து இரவு தூங்குவதற்கு முன்பு குடித்துவிட்டு தூங்கவும். இதன்மூலம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, பன்றிக்காய்ச்சலை அருகே நெருங்க விடாமல் விரட்டிவிடும்.


 • உடற்பயிற்சி

  முறையாக உடற்பயிற்சியை தொடர்ந்து செய்பவர்களின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன்மூலம், உடலில் நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும். அதுமட்டுமல்லாமல், உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும். எண்டோர்பினையும் சுரக்க உதவுகிறது. எனவே, வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை பெற்று, எந்த ஒரு நோயும் உடலை நெருங்காத வண்ணம் பாதுகாத்திட முடியும். எனவே, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள்.


 • நல்ல தூக்கம்

  ஆரோக்கிமான தூக்கம் என்பது உடலிற்கும், மனதிற்கும் நல்லதொரு உற்சாகத்தை தருவதோடு, பிரச்னைகளை உடலை அண்டாமலும் தடுத்திடும். மனஅழுத்தத்தை குறைப்பதில் முறையான தூக்கம் மட்டுமே சிறந்த மருந்தாக விளங்குகிறது. சரியான தூக்கம் இல்லை என்றால், உடல் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஒரு நாள் சிறப்பாக அமைய வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 7 மணி நேர தூக்கமாவது அவசியம். தூக்கமில்லாமல் இருப்பது மன அழுத்த ஹார்மோன்களை சுரக்க செய்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை முற்றிலுமாக சேதப்படுத்திவிடும். இதனால், எவ்வித நோயும் சுலபமாப உடலை தாக்கக்கூடும்.


 • நீரேற்றம்

  எவ்வளவு முடியுமோ, அவ்வளவு நீர் அல்லது திரவ உணவை எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக, சூடான திரவத்தை நாம் உட்கொள்ளும் போது, உடலில் உள்ள வைரஸ் தொற்றுக்களை எளிதில் அழித்திட முடியும். பல்வேறு ஆய்வுகள் கூறுவது என்னவென்றால், போதுமான அளவு ஈரப்பதத்தை உடலில் தக்கவைத்து, வைட்டமின்களை உட்கொண்டு, முறையான ஓய்வு எடுப்பவர்களுக்கு நோய் தொற்றுக்களின் தாக்கம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.


 • முகமூடி அணிவது

  அதிகரித்து வரும் பன்றிக்காய்ச்சல் பரவலில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள, வெளியில் செல்லும் போது மாஸ்க் அதாவது முகமூடி அணிந்து செல்வது ஒரு சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, சுகாதாரமற்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். மேலும், முக்கியமான ஒன்று வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  குறிப்பு: மேற்கூறிய வீட்டு வைத்தியம் பயனுள்ள முறைகள் என்றாலும், நீங்கள் அறிகுறிகளை உணரும் போது மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம். மேலும், மேலே கூறப்பட்ட தீர்வுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதற்கு முன்பு, உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டுக் கொள்ளுங்கள்.
ஸ்வைன் ஃப்ளூ எனும் பன்றி காய்ச்சல் ஆரம்பத்தில் பன்றிகளுக்கு ஏற்பட்டு பின்னர் மனிதர்களுக்கு பரவ தொடங்கியது. இது ஒரு சுவாச நோய். இன்ஃப்ளூயன்ஸா எனும் வைரஸ் மூலம் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோயானது முதலில் சுவாச குழாய்களை பாதித்து, வறட்சி இருமல், மந்தமான செரிமானம் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். H1N1 போலவே, இதுவும் ஒரு தொற்றுநோயாகும். எளிதில் ஒரு நபரிடம் இருந்து மற்ற நபருக்கு பரவக்கூடியது.

இந்த நோயால் பாதித்த நபர் சாதாரணமாக தும்மினால், நோய் தொற்று கிருமிகள் காற்றில் கலந்து அருகே பரவி விடும். இதனாலேயே, ஒருவருக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டால் வேகமாக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்களுக்கு சுலபமாக பரவி விடுகிறது. ஒருவருக்கு இந்த நோயின் தாக்கம் இருந்தால் அவர்கள், உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளுவதன் மூலமே, பிறருக்கு இது பரவாமல் தடுக்க முடியும்.

MOST READ: ஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா?

காய்ச்சல், தலைவலி, உடற்சோர்வு, தொண்டை வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை இந்த நோயின் சில அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் 4 அல்லது 5 நாட்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஒரு வழி என்றால், அது வராமல் தடுப்பது மட்டும் தான். அதற்காக மிக சுலபமான, வீட்டு வைத்திய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை செய்தாலே, பன்றிக்காய்ச்சல் ஏற்படாமல் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் காத்திடலாம்.

   
 
ஆரோக்கியம்