Back
Home » Car News
கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு விற்பனையில் வளர்ச்சி... புதிய அறிமுகங்களுக்கு தயாராகும் டாடா...
DriveSpark | 3rd Aug, 2020 10:00 PM

 • கொரோனா வைரஸ் பரவலினால் பல ஆட்டோமொபைல் நிறுவனங்களது புதிய அறிமுகங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. குறிப்பாக மார்ச்- மே இடைப்பட்ட மாதங்களில் வாகனங்களின் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. • இருப்பினும் இந்திய ஆட்டோமொபைல் துறை பழைய நிலைமைக்கு திரும்ப கடுமையாக போராடி வருகிறது. இதற்கு கடந்த ஜூலை மாத விற்பனை நிலவரம் பெரிய அளவில் நம்பிக்கையை கொடுத்திருக்கும். ஏனெனில் கடந்த மாதத்தில் பல தயாரிப்பு நிறுவனங்கள் கணிசமான விற்பனை எண்ணிக்கைகளை பெற்றுள்ளன. • இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், டாடா மோட்டார்ஸ். அதற்கு முந்தைய ஜூன் மாதத்தை காட்டிலும் சுமார் 43 சதவீத வளர்ச்சி பாதையை நோக்கி சென்றுள்ள இந்நிறுவனம் கடந்த 16 மாதங்களில் இந்த அளவிற்கு எந்த மாதத்திலும் விற்பனையில் ஜொலித்தது கிடையாது. • இதனால் தான் இந்த இக்கட்டான சூழ்நிலையில் புதிய தயாரிப்புகளை சந்தையில் களமிறக்க டாடா நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் இந்த புதிய அறிமுகங்களில் அடங்கியுள்ள கிராவிட்டாஸின் 7 இருக்கை வெர்சன், ஹெரியரின் பெட்ரோல் மாடல் மற்றும் எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி மாடல் உள்ளிட்டவை சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. • இதுகுறித்து ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களில் மொத்தம் ஏழு சோதனை மாதிரி கார்கள் சோதனை இடைவேளையின்போது வாகனங்கள் நிறுத்தும் இடம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்படி எல்லா மாடல்களும் ஒரே இடத்தில் உள்ளதால் சிறிய எச்பிஎக்ஸ் க்ராஸ்ஓவர் கார், மற்ற பெரிய டாடா கார்களுக்கு ஒத்த முன்பக்கத்தை கொண்டிருப்பதை எளிதாக அடையாளப்படுத்த முடிகிறது. • டாடா நிறுவனம் இந்த சிறிய ரக க்ராஸ்ஓவர் காரில் புதிய இரு-பகுதி ஹெட்லேம்ப் அமைப்பை கொண்டுவந்துள்ளதையும் இந்த ஸ்பை படங்கள் மூலமாக அறிய முடிகிறது. தற்போதைக்கு தற்காலிகமாக எச்பிஎக்ஸ் என அழைக்கப்பட்டு வரும் இந்த க்ராஸ்ஓவர் மாடல் டாடாவின் டிகோர் மற்றும் நெக்ஸான் மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. • இதனால் எச்பிஎக்ஸ் விற்பனையில் மாருதி இக்னிஸ் மற்றும் மஹிந்திரா கேயூவி100 மாடல்களை எதிர்கொள்ள வேண்டும். அல்ட்ராஸின் ஆல்ஃபா ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் அதன் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை இந்த மைக்ரோ எஸ்யூவி மாடல் பகிர்ந்து கொண்டிருக்கலாம். • அப்படியே டாடா ஹெரியரை பார்த்தால், இந்த கார் தற்போதைக்கு பிஎஸ்6 2.0 லிட்டர் டீசல் என்ஜின் உடன் மட்டும் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கப்படுகின்ற இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. • ஆனால் ஹெரியர் டீசல் மாடலின் விலை பிஎஸ்6 அப்டேட்டால் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளதால் புதிய வாடிக்கையாளர்களின் சதவிகிதம் மாதத்திற்கு மாதம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தான் இந்த டீசல் என்ஜினிற்கு துணையாக பெட்ரோல் என்ஜின் தேர்வை கொண்டுவர டாடா நிறுவனம் நீண்ட மாதங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. • இந்த வகையில் ஹெரியரில் புதிய 1.5 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் நெக்ஸான் மாடலிலும் வழங்கப்பட்டு வந்தாலும், அதில் உள்ளதை காட்டிலும் கூடுதலான சிலிண்டர்களுடன் ஹெரியரில் பொருத்தப்படவுள்ளது. • இதனால் இந்த மாடலில் இந்த டர்போசார்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படலாம். • இவற்றுடன் தற்போது சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள டாடா கிராவிட்டாஸ் 7-இருக்கை வெர்சன் தான் டாடா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக வெளியாகவுள்ள புதிய தயாரிப்பாக கருதப்படுகிறது. இவை மூன்றின் அறிமுகங்களும் நெருங்கி வருவதால் இவற்றின் சோதனை ஓட்டங்கள் வரும் வாரங்களில் தொடர்ச்சியாக இருக்கும்.
வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி, கிராவிட்டாஸ் 7 இருக்கை, ஹெரியரின் பெட்ரோல் வேரியண்ட் என மொத்தம் 7 எஸ்யூவி மாதிரி கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

 
ஆரோக்கியம்