Back
Home » திரைவிமர்சனம்
Mr.local Review : பழைய கதையில் புதிதாக கலாய்க்கும் மிஸ்டர் லோக்கல்... ஆனா செட்டாகலயே! விமர்சனம்
Oneindia | 18th May, 2019 02:07 PM

சென்னை: திமிர் பிடித்த பணக்காரப் பெண்ணை, ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பையன் காதலிக்கும், திரும்ப காதலிக்க வைக்கும் தமிழ் சினிமாவின் அருதப்பழசான கதை தான் மிஸ்டர் லோக்கலின் கதையும்.

ஒரு கார் ஷோரூமில் வேலை பார்க்கும் சிவகார்த்திகேயனின் அம்மா ராதிகா ஒரு சீரியல் பைத்தியம். பிரபல டி.வி.சீரியல் நடிகையுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்பது ராதிகாவின் ஆசை. அதற்காக அம்மாவை அழைத்துக்கொண்டு, சீரியல் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு புறப்படுகிறார் சிவா.

போகும் வழியில் ஒரு விபத்து. சிவாவின் புல்லட்டை, நயன்தாராவின் கார் இடித்து விடுகிறது. சிக்னல் கோளாறால் நடக்கும் இந்த விபத்து சிவாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே மோதலை உருவாக்குகிறது. இந்த மோதல் வளர்ந்து ஒரு கட்டத்தில் எப்படி காதலாக மாறுகிறது எனும் பழைய பஞ்சாங்கம் தான் மிஸ்டர் லோக்கலின் மீதி அட்ராசிட்டி.

தனது வழக்கமான பாணியை விட்டுவிட்டு, நட்சத்திரங்களை மட்டுமே நம்பி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். இதனால் அவருடைய படத்தில் வழக்கமாக இருக்கும் கலகலப்பு இந்த படத்தில் டோட்டலாக மிஸ்சிங்.

பணக்கார திமிர்ப்பிடித்த பெண் - மிடில் கிளாஸ் பையன் காதலை மையமாக வைத்து, ஈரமான ரோஜாவே, மன்னன், சிங்காரவேலன், எங்கிட்ட மோதாதே, அம்மன் கோயில் கிழக்காலே உள்பட நிறைய சூப்பர் ஹிட் படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. வந்துகொண்டும் தான் இருக்கின்றன. ஆனால் மேலே குறிப்பிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான கதையும், காட்சிகளும் இருக்கும். இதில் அப்படி எந்த காட்சியும் இல்லாதது படத்தின் மிகப்பெரிய மைனஸ். இதனாலேயே படத்துடன் ரசிகர்களால் ஒட்ட முடியவில்லை.

"அடுத்து சண்டை வரப்போகுது, இப்போ பாட்டு வரப்போகுது பாரேன்" என சிறுவர்கள் கூட எளிதாக ஊகிக்கும் திரைக்கதை படத்தின் மிகப்பெரிய தோல்வி. எம்.ராஜேஷ் படம் பார்த்து விட்டு வயிறு வலிக்கச் சிரித்து விட்டு வரலாம் என நம்பி செல்பவர்கள், இந்தப் படத்துக்கு இவ்வளவு காசு கொடுத்து டிக்கெட் எடுத்து விட்டோமே என வயிற்றெரிச்சல் படும் அளவிற்கு இருக்கிறது படம்.

படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் காமெடிக்கு பேர் போனவர்கள். ஆனால், படம் காமெடியே இல்லாமல் அக்னி நட்சத்திர தமிழ்நாடு மாதிரி வறட்சியாக மண்டையைக் காய வைக்கிறது. யோகி பாபு ஒரு காட்சியில் சிவகார்த்திக்கேயனிடம் சொல்வார், 'இந்த மேட்ச் முடியறதுக்குள்ள நீ சிரிக்கற மாதிரி ஒரு காமெடி சொல்றேன் பாரு' என. நம் மைண்ட் வாய்ஸும் இதே போல் தான் படம் முடிவதற்குள் மற்றவர்களிடம் சொல்லிச் சிரிக்கும்படி ஒரு காமெடிக் காட்சியாவது வந்துவிடாதா என ஏங்க வைக்கிறது.

ராஜேஷின் பழைய வெற்றி பார்முலாக்கள் படத்தில் மொத்தமாக மிஸ்ஸிங். முதலில் அவரது டைமிங் லோக்கல் காமெடி. அடுத்தது அவரது பழைய பட நடிகர்களின் சிறப்புத் தோற்ற காட்சிகள். இதே போன்ற குறைகள் சிவா, நயனுக்கும் இருக்கிறது. வழக்கமாக சிவா படங்களில் குழந்தைகளைக் கவரும் படியான காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். ஒரு பாடலிலாவது குழந்தைகளுடன் அவர் ஆடிப்பாடி விடுவார். அந்த ரஜினி பார்முலா இப்படத்தில் மிஸ்ஸிங்.

அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, விஸ்வாசம் என கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன், இப்படக் கதைக்கு எப்படி ஓகே சொன்னார் என்பது பெரிய ஆச்சர்யமே. கிளைமாக்ஸ் தவிர படம் முழுக்க சிவாவுக்கு வில்லியாகவே நடித்திருக்கிறார். ஆனால், அவரது கதாபாத்திரம் மனதில் பதியும் அளவிற்கு இல்லாதது திரைக்கதையின் பலவீனம். மன்னன் பட விஜயசாந்தி ரேஞ்சுக்கு எதிர்பார்த்தால், அந்த கம்பீரம் கீர்த்தனா கதாபாத்திரத்தில் சுத்தமாக இல்லை.

படத்தின் ஒரே ஆறுதல் ராதிகா தான். நயன் வீட்டிற்கு வரும் சமயத்தில் வாயைத் திறந்து கொண்டு பேப்பர் படிக்கும் காட்சியில் ஆஸம். மூத்த நடிகையின் நடிப்பு முதிர்ச்சியை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், பல காட்சிகளில் அவரது நடிப்பு சிவா மனசுல சக்தி ஊர்வசியை நினைவு படுத்துவதை தவிர்க்க இயலவில்லை. சிவாவின் தங்கையாக நடித்திருப்பவரும் அதே அதே.

ஆரம்பக் காட்சியில் சிவா சிறையில் கைதியாக இருப்பதாக காட்டுகிறார்கள். ஆனால் எத்தனை நாள் அவர் சிறையில் இருக்கிறார், அவ்வளவு சுலபமாக வெளியில் வந்து மீண்டும் வேலைக்கு சேர்கிறார் என்பதெல்லாம் லாஜிக் ஓட்டைகள்.

படத்தில் அநியாயத்திற்கு அரசியல் நெடி. தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவம், தீவிரவாதி, சமூகவிரோதி, மீத்தேன், ஈத்தேன் என பெரும்பாலான காட்சிகளில் அரசியல் பேசி இருக்கிறார்கள். ஆனால், ராஜேஷ் மற்றும் சிவாவிடம் மக்கள் அதனை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதால், அது அவ்வளவாக எடுபடவில்லை.

மிஸ்டர் லோக்கலின் பல காட்சிகள் ராஜேஷின் முந்தைய படங்களை நினைவு படுத்துகின்றன. அதிலும் குறிப்பாக நயனும், அவரது மாப்பிள்ளையும் பேசும் ஹோட்டல் காட்சியும், அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நடனமும். கண்ணை மூடிக் கொண்டு அந்த டயலாக்குகளைக் கேட்டால் அப்படியே ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் ஹன்சிகாவும், உதயநிதியும் தான் தெரிகிறார்கள்.

சிவகார்த்திகேயனுடன், யோகி பாபு, சதீஷ், ரோபோ சங்கர், தம்பி ராமையா என நான்கு பேர் சேர்ந்திருந்தாலும், காமெடி ரசிக்கும்படியாக இல்லை. இதில் சிவகார்த்திகேயன் மட்டும் தான் கொஞ்சம் ஆறுதல் தருகிறார்.

படத்தில் வரும் லவ் கேம் கொஞ்சம் புதிய மேட்டராக இருக்கிறது. நிச்சயம் இதனை இளைஞர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த புதிய யுக்தியாக்கிக் கொள்வார்கள்.

ஹிப்பாப் தமிழா ஆதியின் இசையில், கலக்கலு மிஸ்டர் லோக்கலு பாடல் ஆட வைக்கிறது. டக்குனு டக்குனு பாடல் காதுகளுக்கு மட்டுமின்றி, கண்களுக்கும் விருந்தாக இருக்கிறது. படம் சுமாராக இருப்பதால், பின்னணி இசையும் அதே ரகம் தான்.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு எல்லோரையுமே அழகாக காட்டுகிறது. குறிப்பாக நயன்தாராவுக்கு நிறைய ஸ்பெஷல் லென்ஸ் பயன்படுத்தி இருக்கிறார். விவேக் ஹர்ஷனின் எடிட்டிங்க படத்திற்கு உதவவில்லை. ஒவ்வொரு காட்சியும் நீளமாக இருப்பதால், அலுப்பை ஏற்படுத்துகிறது.

ராஜேஷ், சிவகார்த்திக்கேயன், நயன் தாரா என எல்லோரின் ரசிகர்களையும் மொத்தமாக ஏமாற்றி இருக்கிறான் இந்த மிஸ்டர் லோக்கல்.

   
 
ஆரோக்கியம்