Back
Home » திரைவிமர்சனம்
Sevan Review : ஒரு ஆணும், ஆறு பெண்களும்.. தமிழுக்கு இந்தப் படம் புதுசு கண்ணா புதுசு- செவன் விமர்சனம்
Oneindia | 6th Jun, 2019 01:46 PM

சென்னை: ஒரு ஆணுக்கும், ஆறு பெண்களுக்கு இடையே உள்ள தொடர்பு தான் 'செவன்' படத்தின் ஒன்லைன்.

படத்தின் முதல் காட்சியில் தனது கணவர் கார்த்திக்கை (ஹீரோ - ஹவிஷ்) காணவில்லை என போலீஸ் அதிகாரி ரகுமானிடம் புகார் கொடுக்கிறார் நந்திதா ஸ்வேதா. தனக்கும் ஹவிஷ்க்கும் எப்படி காதல் மலர்ந்து, திருமணம் நடந்தது என்பதை விவரிக்கிறார். அதன் வழியாக படமும் கதைக்குள் பயணிக்க ஆரம்பிக்கிறது.

ஒரு ஐடி நிறுவனத்தில் ஹவிஷும், நந்திதா ஸ்வேதாவும் வேலை பார்க்கிறார்கள். அங்கு இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இருவரும் ஒரே வீட்டில் குடியிருக்க துவங்குகிறார்கள். அப்போது ஏற்படும் ஒரு சிறிய மனஸ்தாபத்திற்கு பிறகு, நந்திதாவை விட்டுவிட்டு, ஹவிஷ் மாயமாகிறார்.

நந்திதா இந்த கதையை விவரிக்கும் போது தான் போலீஸ் அதிகாரி ரகுமானுக்கு தெரிய வருகிறது, கார்த்திக் ஒரு மோசடிக்காரன் என்பது. ஏற்கனவே அனிஷா ஆம்புரோசும் தனது கணவர் ஹவிஷ் காணவில்லை என புகார் கொடுத்து, நந்திதா கூறிய அதே கதையை சொல்லியிருப்பார்.

இதுபற்றி ரகுமான் தீவிரமாக விசாரிக்கும் போது, ஹைதராபாத்தில் உள்ள அதிதியும் தனது கணவர் ஹவிஷ் காணவில்லை என புகார் அளித்திருப்பது தெரியவரும். மூன்று பெண்களையும் காதலிப்பது போல் நடித்து, ஹவிஷ் ஏமாற்றியிருப்பதை ரகுமான் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் ஹவிஷை தேடுகிறார். ஹவிஷ் யார், இந்த பெண்களை அவர் தான் உண்மையில் ஏமாற்றினாரா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறது மீதிப்படம்.

ஆர்யாவுடன் சேர்ந்து 'தல பெருநாள்' கொண்டாடிய சயீஷா: வைரல் போட்டோ

ஒரு ஆண் மற்றும் ஆறு பெண்களை மையமாக வைத்து கதையை எழுதியிருக்கிறார் இயக்குனர் நிசார் ஷபி. கதையாக கேட்கும் போது சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் கதையில் இருக்கும் தெளிவு திரைக்கதையில் இல்லை. முதல் பாதி 'நான் அவன் இல்லை' பாணியில் காதல் கதையாக நகர்கிறது. இடைவேளையின் போது பேய் பட எபேக்ட் தருகிறது. அதற்கு பின்னர், க்ரைம் திரில்லராக மாறி, கடைசியில் பழிவாங்கும் படமாக முடிகிறது. ஒரே படத்தில் இத்தனை விஷயங்களையும் காட்ட நினைத்திருக்கிறார் இயக்குனர் நிசார் ஷபி. தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் 'புதுசு கண்ணா புதுசு'.

படத்தின் மைய கதாபாத்திரம் சரஸ்வதியாக வரும் ரெஜினா கசண்ட்ராவுக்கு தான். கிட்டத்தட்ட படையப்பா நீலாம்பரி போல் ஒரு ரோல். ரம்யா கிருஷ்ணன் அளவுக்கு இல்லை என்றாலும், 'பார்த்தேன் ரசித்தேன்' சிம்ரன் ரேஞ்சுக்கு மிரட்டியிருக்கிறார். அழகான ராட்சசியாக அசர வைக்கிறார்.

ராம், துருவங்கள் பதினாரு படத்திற்கு பிறகு, போலீஸ் அதிகாரி என்றாலே ரகுமான் தான் இயக்குனர்களின் நினைவுக்கு வருகிறார் போல. இதிலும் அப்படிப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டர் தான். வழக்கம் போல் சிறப்பாக செய்திருக்கிறார்.

நந்திதா ஸ்வேதா, அனிஷா ஆம்ரோஸ், அதிதி ஆர்யா, த்ரிதா சௌத்ரி, புஜிதா பொன்னடா என படம் நெடுக பல அழகு தேவதைகள் வலம் வருகிறார்கள். இதில் நந்திதாவும், அனிஷாவும் தான் கவனம் ஈர்க்கிறார்கள். குறிப்பாக அனிஷாவின் நடிப்பு அபாரம்.

இவர்கள் அனைவரையும் விட, அதிகமாக நம்மை கவர்வது சரஸ்வதி பாட்டி தான். தனது வில்லத்தனத்தால் அன்லிமிடெட் லைக்ஸ் அள்ளுகிறார்கள். ஆனால் அவரது கதாபாத்திரத்தை நினைத்து, ஆத்திரப்படுவதா, சிரிப்பதா இல்லை இரக்கப்படுவதாக என்பதே தெரியவில்லை. எப்படி இருந்தாலும் பாட்டி தான் படத்தின் பியூட்டி.

சைதன் பரத்வாஜ்ஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படியாகவே இருக்கின்றன. பின்னணி இசையும் படத்தின் திரில்லிங் பீலிங்குக்கு உதவுகிறது. இயக்குனர் நிசார் ஷபி தான் படத்தின் ஒளிப்பதிவையும் செய்திருக்கிறார். அதனால் ஒவ்வொரு பிரேமையும் செதுக்கியிருக்கிறார். எடிட்டிங்கும் சுவாரஸ்யமாகவே உள்ளது.

நான் அவன் இல்லை, படையப்பா என தமிழில் நாம் பார்த்து ரசித்த ஏராளமான படங்களின் கலவை தான் செவன். எக்கச்சக்கமான லாஜிக் ஓட்டைகள் படத்தில் நிரம்பி வழிகிறது. மனநல காப்பகத்தில் இருக்கும் ரெஜினா, அத்தனை சீக்கிரத்தில் எப்படி வெளியே வருகிறார்?, ஹவிஷை பழிவாங்க, போலீஸ் வரை சென்று அந்த பெண்கள் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்? என்பது உள்பட நிறைய கேள்விகள் அந்தரத்தில் தொங்குகின்றன.

இருப்பினும் காதல், க்ரைம், திரில்லர், ரிவெஞ்ச் என ஒரு கலவையான படமாக, புதிய உணர்வை தருகிறது 'செவன்'.

   
 
ஆரோக்கியம்