Back
Home » திரைவிமர்சனம்
கைதி சினிமா விமர்சனம்: ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவன் இந்த கைதி
Oneindia | 25th Oct, 2019 03:12 PM

சென்னை: ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் - எஸ்.ஆர் பிரபு எப்பொழுதுமே தரமான வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் கெட்டிக்காரர். இந்த முறை நல்ல கதை மட்டும் அல்லாமல் ரிலீஸ் செய்வதிலும் தைரியமும் துணிச்சலையும் காட்டி உள்ளார். எவ்ளோ படங்கள் போட்டிக்கு வந்தாலும், நல்ல கதைகளை மக்கள் ஆதரிப்பர் என்ற அவரது 100% நம்பிக்கை வீண் போகவில்லை. கைதி படம் கார்த்தியின் ரசிகர்களை மட்டும் இல்லாமல் பல நல்ல சினிமாக்களை நேசிப்பவர்களை அதிரடியாக கைது செய்துள்ளது.

அந்த வகையில் மாநகரம் திரைப்படத்தில் கலக்கிய லோகேஷ் கனகராஜ் அதே போன்ற மற்றுமொரு தெறிக்க விடும் படைப்பை தீபாவளிக்காக தித்திக்கும் இனிப்பாய் வழங்கியுள்ளார்.

ஒரு சிறை தண்டனை அனுபவித்த கைதியாக கார்த்தி வெகு சிறப்பாக நடித்துள்ளார். நல்ல கதைக்கு மக்களிடம் என்றுமே வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்த திரைப்படம் மூலம் நிறைவேறியுள்ளது. அந்த அளவிற்கு படம் பார்வையாளர்களை இருக்கையை விட்டு நகராமல் உட்காரவைக்கிறது. ஸ்க்ரீனைத் தவிர கண்கள் வேறு எங்கும் அலைபாயவில்லை அந்த அளவிற்கு படம் படு க்ரிப்பாக நகர்கிறது.

படத்தில் ஹீரோயின், பாடல்கள், ரொமான்ஸ் என்பது எல்லாம் இல்லை என சற்றும் யோசிக்காத அளவிற்கு, படத்தை சிறப்பாக கையாண்டுள்ள இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

டெல்லி என்ற லாரி டிரைவர் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கவில்லை, வாழ்ந்துள்ளார் என்று சொல்வது தான் பொருந்தும்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் காட்சிகள் கன கச்சிதம். படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முயற்சியையும், கார்த்தியின் விஸ்வரூப நடிப்பையும் பாராட்டி தள்ளியுள்ளனர். எதையும் ஒரு வித்தியாசமான பார்வையிலும், சிறப்பான கதை அம்சத்திலும் ஸ்கோர் செய்துள்ளார் இயக்குநர்.

நரேன் ஒரு ஸ்பெஷல் போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு சிறப்பான ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் நரேன்.

முழுக்க முழுக்க இருட்டிலேயே எடுக்கப்பட்ட இப்படம் க்ளைமாக்ஸில் ஒரே சீனில் தான் வெளிச்சம் சற்று எட்டிப்பார்க்கிறது. லாரியை வைத்தே படம் நகர்த்தியுள்ள பாணி, ஹாலிவுட்டின் Duel திரைப்படத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

போலீஸ் கூட்டத்தில் வில்லனின் கையாள் ஒருவனும் வில்லனின் கூட்டத்தில் ஒரு நல்லவனும் இருப்பது Departed திரைப்படத்தின் கதையை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. போலீஸ் கூட்டத்தில் இருக்கும் வில்லனின் கையாள் மயக்கத்தில் இருப்பது போன்று நடித்து, அவ்வப்போது தகவல்களை பரிமாறுகையில் நமது மனமும் பதறுகிறது.

பாசமான ஒரு தந்தையாக கார்த்தி தன் மகளை தேடி வருகிறார். அவர் தனது மகளை சந்திக்கிறாரா இல்லையா என்பதை படு சுவாரஸ்யமாக எடுத்துச் சென்றுள்ளார் இயக்குநர். படத்தின் ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டுகிறது.

விஜய் தொலைக்காட்சி புகழ் தீனா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவரின் பங்கு முக்கியமானது. நல்ல எதிர்காலம் அவருக்கு சினிமாவில் இருக்கிறது.

க்ளைமாக்ஸ் சீன் படு மாஸ் ஆக உள்ளது. தொடர்ந்து கார்த்தி துப்பாக்கியால் கமிஷனர் ஆபீஸ் வெளியில் சுட்டுத்தள்ளுவது நம்மை டெர்மினேட்டர் படத்தை சற்று நினைத்து பார்க்க வைக்கிறது.

இப்படி சில ஹாலிவுட் படங்களை நமக்கு ஞாபகப்படுத்தினாலும், அவற்றின் சாயல் மட்டும் தோன்றுகிறதே தவிர, படத்தை படு மாஸ்ஸாக அதிரடியாக எடுத்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு பெரிய கைதட்டல்கள். இந்த படத்திற்கு கதாநாயகி இல்லை, பாட்டும் இல்லை, அனால் விறுவிறுப்புக்கு குறையும் இல்லை.

பிகில் சினிமா விமர்சனம்: சும்மா வேற லெவல் வெறித்தனம்

படத்தின் வில்லன் அர்ஜுன்தாஸ், ஹரிஷ் உத்தமன் வெகு சிறப்பாக நடித்துள்ளனர். படம் நிச்சயம் வசூலை வாரி குவிக்கும் என்பதோடு, இது நிச்சயம் ஒரு மெகா ஹிட் படமாக அமையும். கைதி படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள். பல பிரபலமான நடிகர்கள் இந்த படத்தை பார்த்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து மழை பொழிந்து கொண்டு இருக்கின்றனர்.

கைதி படம் கார்த்தியின் ரசிகர்களை மட்டும் இல்லாமல் பல நல்ல சினிமாக்களை நேசிப்பவர்களை அதிரடியாக கைது செய்துள்ளது.

கைதி வசூலிலும் செம்ம தீ பறக்கும்.

ஒருபுறம் இளைய தளபதி விஜயின் பிகில் ரிலீஸ் மற்றுமொரு பக்கம் கார்த்தியின் கைதி. இரண்டும் வெவ்வேறு கதைக்களங்களுடன் இந்த தீபாவளியை வெறித்தனமாய் தாக்கியுள்ளன.

   
 
ஆரோக்கியம்