Back
Home » செய்தி
விபி துரைசாமி பற்ற வைத்த நெருப்பொன்று.. டென்ஷனான அதிமுக.. ஏகப்பட்ட குஷியில் திமுக.. லாபம் யாருக்கு?
Oneindia | 12th Aug, 2020 02:00 PM

சென்னை: பாஜக Vs திமுக என்ற ஒரு வார்த்தையை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், ஏதோ ஒரு விஷயத்துக்கும் அடி போட்டுள்ளார் மூத்த தலைவர் விபி துரைசாமி.. அதாவது பாஜக அதிமுக உரசல் அதிகரித்தால் லாபம் திமுகவுக்குதான் என்பதே நாம் இதன்மூலம் அறிய வரும் செய்தி!

திமுகவின் டாப் 4 பதவிகளில் ஒன்றை கைவசம் வைத்திருந்தவர் விபி துரைசாமி.. அப்படிப்பட்ட இவர் வெளிப்படையாக போர்க்கொடி தூக்கியபோது அதிர்ந்தது திமுக மட்டுமில்லை.. ஒட்டுமொத்த தமிழகமும்தான்!

பரிதி இளம்வழுதிக்கு பிறகு, துணை பொதுச்செயலாளர் பதவியை நீண்ட காலம் அலங்கரித்தவர் விபிசி துரைசாமி.. இருந்தாலும் இவரது அரசியல் ஏற்ற இறக்கங்களுடன்தான் பயணித்தது.. கொங்கு மண்டலத்தில் எந்த அளவுக்கு கவுண்டர் சமூகம் உள்ளதோ, அதுபோலவே, அருந்ததியர் சமூகமும் உள்ளது.. அப்படிப்பட்ட மக்களிடம் தனித்துவத்துடன் விளங்கியவர்.

அதிருப்திகளும், ஏமாற்றங்களும் இவருக்கு கட்சிக்குள் ஏற்பட்டபோதெல்லாம் "கவலைப்படாதே.. உனக்கு நல்ல வாய்ப்பு கட்டாயம்தருவேன்" என்று ஆசுவாசப்படுத்தி இவரை செல்லப்பிள்ளையாகவே வைத்திருந்தார் கருணாநிதி. இதற்கு பிறகுதான் துணைப் பொதுச்செயலாளர் பதவியும் கிடைத்தது.

கலைஞர் துடிப்புடன் இருந்தவரை விபி துரைசாமியின் ஒவ்வொரு நகர்வுகளையும் திமுக கண்டதை மறுக்க முடியாது.. அதேபோல, கருணாநிதியும் விபி துரைசாமிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவத்தை தந்திருந்தார் என்பதையும் மறுக்க முடியாது.

திடீரென்றுதான், பதவி, பொறுப்பு குறித்த பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது.. குறிப்பாக அந்தியூர் செல்வராஜை எம்பி ஆக்கியதுமே தலைமை மீது மொத்த அதிருப்தி கலந்த சோகத்தில் மூழ்கிவிட்டார் துரைசாமி.. முக ஸ்டாலினுடன் இருக்கிற சிலர்தான் தன்னை ஓரம்கட்டியதாக முழுவதுமாக நம்பிவிட்டார் துரைசாமி. பிறகுதான் முருகனை சந்தித்தது உட்பட அடுத்தடுத்த சூடான விஷயங்கள் நடந்து முடிந்தன. கருணாநிதி இருந்தவரை வாய் திறக்காத துரைசாமி, "திமுக.வில் அவமானங்களை தின்று வாழ்ந்தேன்" என்று இன்று ஸ்டாலினை அப்பட்டமாக வெளிப்படையாக குற்றஞ்சாட்டியது திமுகவுக்கு பெருத்த ஷாக்தான்!

கணவர் கறுப்பர் இனம்..எனக்கு 2 கருப்பு இன குழந்தைகள்... கமலாவின் தாய் சியாமளா பெருமிதம்!!

திராவிட பிம்பம் ஒன்று, பாஜகவின் நிழலாக முழுசா உருமாறி இன்று நின்றுள்ளது.. "தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும்... பாஜவை எந்த கட்சி அனுசரித்து போகிறதோ அந்த கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும்.. தமிழகத்தில் திமுக vs அதிமுக என இருந்த நிலை திமுக vs பாஜக என மாறி உள்ளது" என்று தில்லாக ஒரு சேலஞ்சை முன்வைத்துள்ளார் விபி துரைசாமி.

இதில் 2 விஷயங்கள் கவனிக்கத்தக்கது.. ஒன்று அதிமுக சம்பந்தப்பட்டது.. கடந்த ஒரு வருஷத்துக்கும் மேலாகவே அதிமுகவுடன் பாஜக சுமூகமான போக்கை கடைப்பிடிக்கவில்லை.. நிறைய முரண்பாடுகள், நிறைய அதிருப்திகள் அதிமுக-பாஜகவுக்குள் நடந்து வருகின்றன.. இல்லையென்றால், கூட்டணியில் இருக்கிற கட்சி என்றுகூட பார்க்காமல், நயினார் நாகேந்திரனை எடப்பாடியாரே அதிமுகவுக்கு வருமாறு அழைத்திருக்க மாட்டார். இதைதவிர முருகனின் செயல்பாடுகளில் அதிமுக கொஞ்சம் அப்செட் ஆகியும் இருக்கிறது.

இவர்களுக்கு நடுவில் பாஜகவின் எஸ்விசேகர் உள்ளே புகுந்து, அதிமுகவுக்கு அட்வைஸ் தரவும், அந்த விவகாரம் இன்னும் கொந்தளித்து கிடக்கிறது.. ஆக ஒரு இணக்கமான சூழல் அதிமுக-பாஜகவுக்குள் இல்லாத நிலையில் விபி துரைசாமியின் இந்த பேட்டி எந்த அளவுக்கு கூட்டணிக்கு பலம் தரும் என்று தெரியவில்லை. அதேசமயம், விபி துரைசாமி பற்ற வைத்துள்ள இந்த நெருப்பால் திமுகவுக்கே அதிக பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததன் விளைவுகள், செயல்பாடுகளை மக்கள் தற்போதும் கவனித்து கொண்டுதான் வருகிறார்கள்.. இவர்கள் மீண்டும் கூட்டணி வைத்தால், அது மிகப்பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் சட்டமன்ற தேர்தலில் ஏற்படுத்துமா என்பது சந்தேகம்தான்.. அந்த பலவீனங்கள் அத்தனையும் திமுகவுக்குதான் சாதகமாக மாறும்.. மேலும் அமைச்சர்களுக்குள் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக மோதல் வெடித்துள்ளது. மறுபக்கம் பாஜக தரப்பிலிருந்து சீண்டல்கள் ஆரம்பித்துள்ளன. விபி துரைசாமி போட்ட போட்டால் அதிமுக ஷாக்காகியுள்ளது.

இப்படி இவர்களுக்குள் இப்போதே மோதல் வெடித்திருப்பதால் நாளை கூட்டணி வைத்தாலும் கூட ஒருவருக்கு ஒருவர் காலை வாரி விடும் வேலைகள் ஜரூராகவே நடக்கும். மேலும் பாஜகவை வெல்ல விடாமல் தடுக்க அதிமுகவினர் முனைப்போடு பணியாற்றும் சூழலும் உருவாகலாம். அதை விட முக்கியமாக கூட்டணிக் கட்சிகளும் கூட காத்திருந்து கருவறுக்கவே செய்வார்கள்.

இன்னொரு பக்கம் தேமுதிகவை தன் பக்கம் கொண்டு வர திமுக முனைப்புடன் உள்ளது. பாமக நிச்சயம் திமுக பக்கம் வராது. அது அதிமுகவுடன் இணைந்திருக்கவே விரும்பும்.. அதேசமயம், அதிக இடங்களையும் கேட்டுப் பெறும். ஆனால் அதிமுக உடனே தரும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஒரு வேளை கொடுத்தாலும் அதில் பாதியை ஜெயிக்க விடாமல் உள்ளூர் ஆட்கள் தடுக்க முயற்சிக்கலாம். இந்த உள்ளடி வேலைகள் அனைத்தையும் தனக்கு சாதகமாக்க பார்க்கும் திமுக.

இப்படி அதிமுகவின் மொத்த அதிருப்திகளும் திமுக பக்கம் சாய வாய்ப்புள்ளது.. அதற்கேற்றார்போல, திமுகவும் பாஜகவை சமீப காலமாக பகைத்து கொள்ளாமல் உள்ளது.. போதாக்குறைக்கு பிரசாந்த் கிஷோர் வேறு உள்ளே இருக்கிறார்.. இந்து மதத்துக்கு ஆதரவான கட்சி என்பதையும் சமீப காலமாகதிமுக வெளிப்படுத்தியும் வருகிறது. அதுதொடர்பான போஸ்டர்களையும் இப்போதெல்லாம் அதிகமாகவே பார்க்கவும் முடிகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் அதிமுக பாஜக இடையிலான சீண்டல்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதை திமுக அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறது.. கிடைக்கப் போகும் லாபம் யாருக்கு. நஷ்டப்படப் போவது யார் என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும்.. அதுவரை இதுபோன்ற பட்டாசுகள் வெடிக்கத்தான் செய்யும்.. மக்களும் ஜாலியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

 
ஆரோக்கியம்